Tuesday, 1 August 2017

எதிரிகளை பக்கத்தில் வைத்திருக்க நினைக்கிறேன்..

எதிரிகளை பக்கத்தில்
வைத்திருக்க நினைக்கிறேன்..
அவர்களின் பலவீனமும்
என் பலமும் தெரியும்,
பிழைத்துக் கொள்ளலாம்...
துரோகங்கள் மறைந்த நேசிப்பை..
வஞ்சகம் நிறைந்த உறவை..
பொறாமை பொதிந்த பார்வைகளை..
ஏளனம் மிகைத்த புன்னகையை
இந்த வழிப்போக்கனுக்கு
புரிய இன்னும் தெரியவில்ல..

மறந்துவிடுதல்


எல்லாவற்றையும்
மறந்துவிட ஆசைதான் எனக்கு...
எல்லாவற்றையும் 
நினைவில் வைத்திருக்கவும் ஆசைதான் எனக்கு..
இரண்டுமே வேண்டுமெனில்,
அல்லது இரண்டில் ஒன்றேனும் வேண்டுமெனில்
இயற்கையை கடக்க வேண்டுமாம்..
ஆனால் சில போது;
மறக்கக்கூடாததை மறந்தும்,
மறக்க வேண்டியதை நினைத்தும்
குற்றம் புரிந்துவிடுகிறேன்...
நீ சொல்வது போல
நான் குற்றம் புரிந்துவிடுகிறேன்...
அந்த நாய்கள் ஓயாமல் என்மீது குரைப்பதையும்,
அந்த நாய்கள் என்மீது மூர்க்கமாய் பாய்வதையும்,
அந்த நாய்கள் கடித்து குதற முனைவதையும்,
அந்த நாய்கள் என் மீது மூத்திரம் கழிப்பதையும்,
அந்த நாய்கள் என் ஆடைகளில் மலம் கழிப்பதையும்,
சிலபோது மறந்து விடுவதால்தான்
மாமிசங்கள் எரிந்து, அவை பசிபோக்க
இன்னு அந்த பாதையில் நடக்கிறேன்...
நான் மறந்து விடுவதும்,
நினைத்துக்கொண்டிருப்பதும்
என் குற்றம்தான்...
என் மீது புன்னகை வீசிய உதடுகளையும்,
என் மீது கழிவிரக்கம் கொண்டு பார்த்த கண்களையும்,
என் தனிமைகளில் இறுகப்பற்றிய கரங்களையும்,
என் உடைதல்களின் வருடிக்கொடுத்த விரல்களையும்,
என்னால் எப்போது மறக்கமுடிவதில்லை...
அவை மீண்டும் மீண்டும் பெரும் கால்களாய் மாறி
என்னை எட்டி உதைத்து மிதித்தாலும்,
பதித்துக்கொண்ட பிம்பங்களை
என்னால் மறக்க முடிவதில்லை...
இருள் மட்டும் சூழ்ந்த பாதைகளில்,
நிழல்களின் திசையை மட்டும் நினைக்கச் சொல்கிறாய்...
வறண்டு கிடக்கும் பாலையில் நிற்கையில்
பனித்துளிகள் பற்றி கவிதை கேற்கிறாய்...
புயலில் வீழ்ந்த மரத்திடம்
வசந்தங்களை மட்டும் நினைக்க சொல்கிறாய்,
உறக்கம் இழந்தவனிடம்
கனவுகளை மட்டும் காண சொல்கிறாய்...
இப்படித்தான் உன்னிடம்
மறக்கக்கூடாததை மறந்தும்,
மறக்க வேண்டியதை நினைத்தும்
குற்றம் புரிந்துவிடுகிறேன்...
நீ சொல்வது போல
நான் குற்றம் புரிந்துவிடுகிறேன்...
மறந்துவிடுதல்
என்பது எது
மறந்துவிடுகிறேன்...

Wednesday, 28 June 2017

"ஏன் காதலை மட்டுமே பாடுகிறாய்?"

பெரும் கடலை
துளித்துளியாய் பருக முனைதலைப் போல
உனக்கான காதலை சொல்ல
என் வார்த்தைகள் திணறிக்கிடக்கின்றன
யஷோதரா...
வாசியடையும் ஒவ்வொரு சுவாசமும்
காதலின் சூட்சுமக் கணக்கில்
ஒரு பிரபஞ்ச ரகஸியத்தை எழுதி வைக்கிறது..
"ஏன் காதலை மட்டுமே பாடுகிறாய்?"
அதைத்தவிர இங்கே ஏதும் பாடக்கிடக்கிறதா..?
மூன்றாம் கண் தெளிந்த ஆன்மாக்கள்
காதலைத் தவிர எதைக்காணும்...
அகோசரங்களின் வாயில்களை
தேடியலையும் அந்தணர்களின்
நதி காதல் என்பது உனக்கு தெரியுமா
யஷோதரா...
என்னில் மறைத்துக் கொண்ட
மூல வேர்களில் உன் பெயரை எழுதிவைத்திருக்கிறேன்....
ஜீவசக்தியாய் என்னில் பரவும் சுவாசம் முழுதும் உன்னை நிரப்பிவிடுகிறேன்...
நான் என்கிற என் சூட்சும சூத்திரங்களை
நீயாக திரித்திருகிறேன்...
இப்போது இருள் மறைத்த ஒரு பெருவளியில்
நம் காதல் மட்டுமே என் ஒற்றை உணர்வாய்
என்னை வழிநடத்திப் போகின்றது...
எனக்கு உன் காதலைத் தவிர எதுவும் தெரியாது.

Tuesday, 20 June 2017

இவனின் புன்னகை...

பிரபஞ்ச இரவில் படர்ந்த
ஒரு சுடரின் கதகதப்பை
அறைக்குள் இழுத்து வருகிறான்
வழிப்போக்கன்...
இனி இருளின்
மருளகன்ற பெருவெளியில்
ஒரு இறகைபோல மிதந்து கிடக்கும்
இவனின் புன்னகை...

Saturday, 27 May 2017

தனிமை...

கசியும் குளிரின் நடுவில்
ஒரு கனத்த போர்வைக்குள் நடுங்கிக் கிடக்கிறது
தனிமை...
இருப்பின் நிதர்சனம் விரிந்த போது
ஓற்றை நிலா உன்னை தனித்துக் கடந்தது யாமினி!!
தனிமையின் வாசனை வடிந்த
விடியலின் பனித்துளிகளில் நுகர்ந்து கடக்கும்
ஒரு வழிப்போக்கனின் கைகளில்
விளக்காகிறேன் நான்...

Monday, 22 May 2017

பெரும் சாபத்தின் நீட்சி...

நிஷ்டை களைந்த இரவின் ஓரத்தில்
வெறுமையாய் கரைகிறது ஞானம்!!!
“ஆழ்ந்து படர்ந்த பேரமைதி...
ஆசைகள் கடந்த மோட்சம்...
பெருநெறி செலுத்திய பாதம்...
ஞானம் தெளிந்த மௌனம்...
மருள் அகன்ற பாதை...
நேசத்தில் குழைந்த வார்த்தைகள்...
அன்பின் சூட்சுமம்...”
இப்படி ஓரு மழை இரவில்
ஒரு நிஷ்டைக்குள் வாசியடைந்தது
அந்த உன்னத ஆன்மா!!!
"குருதியில் நீர்த்த தாகம்..
வார்த்தைகள் சுமக்கும் வக்கிரம்..
மலம் சுமக்கும் இதயங்கள்..
இருள்படிந்த கண்கள்..
மமதை செறிந்த ஞானம்...
பேரிரைச்சல் நிறைந்த அசுவத்தம்..
குரோதங்களின் சூட்சுமம்...
அத்தியயனங்கள் மறந்த உதடுகள்.."
இப்படி, இன்னொரு இரவில்
"துறவை" போர்த்திக் கொண்டது பேரவம்...
அசப்பியம் ஓதும் 
அக்கனின் ஓலத்தில்
நிஷ்டை களைந்து விழித்துக் கொண்டது
இந்த இரவு...
அமைதி கரைந்த உன்னத இரவில்
கசிந்துக் கொண்டிருக்கிறது
பெரும் சாபத்தின் நீட்சி...


Saturday, 13 May 2017

இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

வெறுமையின் ஆழத்துள்
உடைந்து நொருங்கிய கண்ணாடி
பெரும் மௌனத்தின்
விம்பத்தை யாரிடம் காட்டும்....
காதலின் மெல்லிய ஆசுவாசம்,
தூரலைபோல சிதறும் உன் முத்தங்கள்,
வர்ணம் கலைந்த ஒரு கனா...
தூக்கம் துறந்த தனித்த காத்திருப்பு...
எழுத மறந்த நாட்குறிப்பின் பக்கங்கள்...
விரகம் நீர்த்த மெல்லிய அனைப்பு...
உருகி வழிந்து ஆடிக்களிக்கும் ஒரு மெழுகுவர்த்தி..
கசிந்து வழியும் மரணத்தின் நெடி...
மனதை நெருடும் எழுதப்படாத கவிதைகள்..
தூரத்தில் கேட்கும் உன் மெல்லிய விசும்பல்...
எல்லாம் மறையும் இந்த
யாமத்தில் வழியும் ஆகிரியில்
இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

இரவின் வாசனை

அதிகம் வெறுக்கும் ஒன்றைப்பற்றி
அதிகமதிகம் பேசித்தீர்க்கிறது இந்த காற்று...
மாயானங்களின் வாசனை சுமந்தபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலை போல இந்த மனது
ஒரு அந்தி முடியும் வரை காத்திருக்கிறது
இருளுக்குள் மூழ்கிவிட்ட ஒரு கடல்
என் அறைக்குள்ளே இரைந்துக்கிடப்பதையும்
அது ஒரு காந்தாரியை இசைத்து வழிவதையும்
பின்னொரு கனவில் நான் கண்டு விழித்தேன்...
“அந்த இருளும் ஒரு மௌனத்துள் மூழ்கிக் கிடந்தது...”
காற்றின் விளரி படிந்த
மீதமிருக்கும் ஒரு பாடலைக் அருந்தி
ஒரு இரவை கடந்துவிட முடியுமா...??
இரவின் வாசனையில்
விரகம் தீர்க்கும் ஒரு பாடல் அது...

Friday, 5 May 2017

ஒரு நேசம் மட்டுமே அந்த உலகின் விலாசம்

அந்த ஒற்றைக் கவிதையின்
வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து
மெல்ல உருவங்களாய் சிதறி
காதலின் உலகை வரைகின்றன...
உணர்வுகள் நீர்த்த மனங்கள்
கருப்பு வெள்ளையாய்
அந்த உலகை கண்டதாயும்
தூரத்தில் உதிர்ந்து விழும்
நட்சத்திரம் என்பதாயும்
பதிந்துக் கொள்கின்றன....
ஒரு நேசம் மட்டுமே
அந்த உலகின் விலாசம்

Wednesday, 3 May 2017

“காதல் என்பது எது”

“ஆன்மா என்பது எது’’ எனக் கேட்கிறாய்...
“பெரும் காதலின் பெருவெளியில் தனித்து நிறைந்து
பரந்துக் கிடக்கும் இரகசியத்தின் பிம்பம்” என்கிறேன்...
“காதல் என்பது எது” என்கிறாய்...
அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும்
மூலத்தின் யதார்த்தம்” என்கிறேன்...
“வாழ்க்கை என்பது எது” என்று கேட்கிறாய்...
ஸ்தூலத்தின் பிரிவோன்றிலும் ஆன்மாவில் புன்னகை தரும்
பெரும் காதலின் நினைவுக் குறிப்புக்கள்” என்கிறேன்
‘‘மரணம் என்பது எது’’ என்கிறாய்...
“வாழ்ந்து முடித்த ஆன்மாக்களின் கொண்டாட்டம்” என்கிறேன்..

Monday, 24 April 2017

யாமினி!!!

யுகாதிவரை நீளும்
உன் அந்தகார இருளுக்குள்,
இன்னும் எத்துனை ரகஸ்யங்களை
பொதித்து வைத்திருக்கிறாய் யாமினி...
தனிமையை விட்டு வெளியேறிவிடுகின்ற
நேசங்களை சில கனவுகளைக் ஏவி
இறத்தலுக்கும் இருப்புக்குமிடையில் வதைக்கிறாய்...
"ஒற்றை கணத்தில் எத்தனை மரணத்தை
கடக்கிறது இந்த ஆன்மா"
சிவப்பு நிறத்தில் சில வார்த்தைகளை
இப்போது திரித்துக் கொண்டிருக்கிறேன்...
இந்த யாமம் தீருமுன் மௌனத்தை
தூக்கிலிட்டு விடுவேன்...
யாமினி!!!
உன் விசும்பலின் தொலைவில்
செத்துக் கிடக்கிறது இந்த அலத்தி...
அதன் கனவுகள் கருப்பாய்
எனக்குள் வழிந்துக் கொண்டிருக்கிறது...

Sunday, 23 April 2017

என்னில் ஜீவனாய் வழியும் ஆபகை நீ..

அரிதம் படர்ந்த தனிமையொன்றில்
ஆவி நீர்த்த பிண்டமாய் கிடந்திருந்தேன்...
அறுதிசையற்ற பெருவெளி,
சூன்யங்களில் சிக்கிய கனவு
கண்களில் அடங்கிய பெரும் நிசப்தம்...
அல்லியனை போல நான்
மீண்டும் தனிமை மிகைத்த ஆரணியத்தில் கிடந்தேன்...
காதல் எனும் தாழ்திறந்து
மெல்ல என்னுள் கசிந்துக் கொண்டிருக்கிறாய் யஷோதரா!!
இந்த வெறுமையை
உன்னத காதலால் நிரப்பிவிடுகிறாய் நீ...
அடல் கடந்துவிட்ட என் அங்கிதங்களின் மேல்
அங்கையின் ஸ்பரிசத்தில் மாயம் செய்கிறாய்...
“யுகங்களை கடந்துவிடுகின்ற
ஒரு முத்தம் வேண்டும்”
மெய்தழுவி ஒரு நீண்ட பெரும் முத்தம்...
யாமங்களில் குவியும் நிஷ்டையை போல
போதை மிகுந்த ஒரு முத்தம் வேண்டும்...
முத்தங்கள் கடத்தும் ஜீவனின் சூட்சுமம்
இரவின் கடலை போல மிக்க ரகசியமானது யஷோதரா...
அந்த கடலின் ஆராவம்
நம் கனவுகளுக்குள் ஒரு விசும்பலை போல படர்கிறது
கேட்கிறாயா..!!!
என்னில் ஜீவனாய் வழியும்
ஆபகை நீ..
இருள் படர்ந்த இந்த அனங்கமெங்கும்
உன் புன்னகை நட்சத்திரங்களை செய்துகொண்டிருக்கிறது..
எங்கிருந்தாய் என் கண்மணியே...

Thursday, 6 April 2017

எனக்கு பனித்துளிகள் வேண்டும்.

என்னை தழுவி,ஸ்பரிசித்து ஆசுவாசப்படுத்தும்
ஒரு காற்றை தோழமை கொண்டிருக்கிறேன்...
எப்போதும் என் எல்லா உணர்வுகளையும் அந்த காற்றோடு மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடிகிறது...
இரவுகள் தீரும் வரை அந்த காற்று சொல்லும் கதைகள் மெல்லிய விசும்பல்களாய்
என் உணர்வுகளுக்குள் விரவி நிற்கும்....
விரல்களில் அப்பிக்கொள்ளும் காய்ந்த என் கண்ணீரின் வாசனையை மெல்லிய தீண்டலில் கண்ணீரை காயவைக்கும் மாயம் கொண்ட அந்த கற்றிடம் நான் உணர்கிறேன்,
இந்த கங்குலின் கருமைக்கும் எனக்கும் என்ன உறவோ அதே உறவு தான் அந்த கற்றுக்கும் விடியலுக்குமானது, ஒவ்வொரு விடியல்களிலும் பூக்களின் இதழ் கழுவும் பனித்துளிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றியும் எங்கே அவை போகின்றன என்பதை பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
பூவிதழ் போல மெல்லிய இதயம் ஒன்று இருக்கிறது.
எனக்கு பனித்துளிகள் வேண்டும்.

Monday, 27 March 2017

மாரக ஜாமம்

இருண்ட காவுகளின் நடுவே 
தனித்தோடும் புழையினைப் போல்,
வழிந்துக் கொண்டிருக்கிறது
சில நினைவுகள்...
இந்த மாரக ஜாமம் இன்னும் 
நீள்வதேனோ...

Thursday, 9 March 2017

நான் மறைந்து கொள்கிறேன்..."

இனி என் பெயரை மட்டும்
அவர்கள் நினைவில்
வைத்துக் கொள்வார்கள்....
"அவர்களின் உலகிலிருந்து
நான் மறைந்து கொள்கிறேன்..."

Monday, 6 March 2017

#நீ_என்_பேரிசை ♪

காதலின் பெருவெடிப்பில்
சிதறி கிடைத்தது 
இந்த பிரபஞ்சத்தின் துகள்கள்...
எந்த பெருவெடிப்பில்
நிகழ்ந்தது இந்த உன்னத காதல்
காதலின் கால சூட்சுமம்
எங்கிருந்து எழுதப்பட்டது
என் யஷோதரா....
முடிவிலிளிகளில் இருந்து
நீடிக்கிறது நம் காதலின் இரவு...
அணுவை போல பிளவுறும் கணங்கள்
யுகம் கடந்த ஒரு பகலை நோக்கி
இந்த இரவை நீண்டதாய்
நகர்த்தி கொண்டிருக்கிறது...
காதலின் உன்மத்தத்தில் சிந்திய
நம் விசும்பல்கள் சிதறி
இந்த இருண்ட வானமெங்கும்
நட்சத்திரங்களாய் தெறித்ததை
உன் கவிதை மட்டும் சொல்லிக்கொண்டது
என் யஷோதரா...
அண்டங்கள் இயங்கும்
மூலத்தின் பேரிசை இப்போது,
உனக்கும் எனக்கும் மெல்ல கேட்கிறது...
பிரபஞ்சம் கடந்த
காதலின் பெருவெளியில்
நீ என் பேரிசையாகிறாய்
நான் உன் கவிதையாகிறேன்...

Tuesday, 28 February 2017

இந்த குளத்தில்

இந்த குளத்தில் எங்கிருந்தோ
கல்லெறிந்துக் கொண்டிருக்கிறார்கள்...
குழப்பத்திலிருந்து பெரும் கேள்விகள் அலைகளாய்
எழுந்து மெல்ல கரைகளை விழுங்கிக்கொள்கிறது...
"நிலவின் பிம்பம் படிந்த கங்குலொன்றில்
இந்த குளம் சலனமற்று தெளிந்துக் கிடந்தது"

Sunday, 26 February 2017

குலிஸ்தானின் ரோஜா

சின்னஞ்சிறு புல்புலை போல
குலிஸ்தானுக்குள் நுழைந்துக் கொண்டேன்.
வாசலில் ஒரு ரோஜா
புன்னகைத்து சொன்னது
‘’இது சா’அதியின் தோட்டம்
உன் ஆயுளால் நீ பறக்க வேண்டியிருக்கும்’’
“ஒரு காதலின் சுடரில் என்னை
எரித்து விட்டே வந்திருக்கிறேன்,
ஒரு கிண்ணமாயே மாறி
உன்மத்தம் தரும் மதுவை
நிரப்பிக் கொள்ளவே வந்திருக்கிறேன்
ரோஜாவே”
பரவசம் தரும் இந்த வெளியெங்கும்
மெல்ல பறந்து பல்கீஸ் எனும் ரோஜாவை
தேடிக்கொண்டிருகிறது இந்த புல்புல்...
வெண்ணிறமாய் பூத்துக்குலுங்கும்
இந்த குலிஸ்தானில்
தனியே ஒரு கருப்பு ரோஜா
விடியலில் வழியும் பனித்துளிக்காக
பூத்துக் கிடந்தது...
பனித்துளியாய் மாறி
ரம்மியம் வழியும் அந்த கருப்பு ரோஜாவின்
இதழில் புல்புல் படர்ந்த போது
நிஷ்டை கலைந்த பல்கீஸ் எனும் ரோஜா
என் பெயரை விசும்பிக்கொண்டு மீண்டும்
மலர்ந்தது...
சா’அதி குலிஸ்தானில் விழிக்கும் முன்பே
நான் அங்கே மயங்கிக் கிடந்தேன்....
எப்படி அந்த ரோஜாவை திருடிக்கொண்டு
வெளியே வருவது....

Thursday, 2 February 2017

‘’நான் ஒரு புல்லாங்குழல் ♪ ’’



உன்மத்தமான ஒரு கவிதை என்னுள் மெதுவாய் வழிகிறது....
அந்த கவிதையில் கரைந்து மெல்ல மறைகிறேன் நான்...♪
‘அற்புதமான ஒரு கவிதையை நேசிக்கிறேன்”
அந்த கவிதை என்னை நேசிக்கும் போது நான் அற்புதமாகிறேன்....
உன்னதமான காதலில் நாங்கள் அற்புதமாகிறோம்.

‘இரட்டையர்களை போல நாங்கள்’
ஒற்றை ஆன்மா இரு ஸ்தூலங்களில் ஊதப்பட்டிருக்கலாம்
இந்த இடைவெளியும் மெல்லிய கனமாய், பெரும் ரணமாய் நமக்குள்ளே கரித்துக் கொல்கிறதே கண்ணே!
பெரும் காதல் தகத்தின் வரம் நீ, வாழ்வின் சரம் நீ,
ஒவ்வொரு விடியலிலும் என்னை பரவசமூட்டும் பறவைகளின் இசை நீ...
வா இந்த உன்னதத்தை கொண்டாடலாம் யஷோதரா♪, நமக்கான காதல் வானம் எல்லையற்றது...
நம் அன்பின் சிறகுகளை நாம் எப்படியும் இந்த வானமெங்கும் விரிக்கலாம் கண்ணம்மா...
‘’நான் ஒரு புல்லாங்குழல் ♪ ’’
பெரும் ரணங்களில் மீண்ட மூங்கில், உன்னால் மாட்டுமே இசைக்க முடிந்த புல்லாங்குழல்.
என்னை இசைத்துக்கொண்டே என் இருப்பில் நீளும் கவிதை நீ...
இந்த அண்டம் அசையும் மறைந்த இசையொன்றை என்னில் எழுப்பிக்கொண்டே இருக்கிறாய் யஷோதரா, காதலை மெல்ல வளர்க்கும் இரவின் இசையது...
இந்த இரவுகளையும் பகல்களையும் குதூகலமாய் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்...
நீ என்னையும் நான் உன்னையும் உடுத்தியிருக்கிறோம்....
நான் எனும் குளத்தை நிரப்பும் பெரும் மழை நீ, ஓயாமல் அன்பை பொழிகிறாய். பொழிந்துக் கொண்டேயிருக்கிறாய்....
காதலெனும் காட்டோடு என்னை எரித்து விடுகிறாய்...
“நிறத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கை போலத்தான் நீயும், நிறம் இழந்ததாய் எதையேனும் கண்டிருந்தால் எனக்குச் சொல்லி விடு ♪♪
சுவாசத்தின் இருப்பிடங்கள் நீயும் நானும் சந்திக்கும் புள்ளியில் சேரும் போது இருப்புக்களை புதுப்பிப்போம்
உன் சுவாசங்களின் சூட்டில் ஒரு உலை கொதிக்கும் சுகம் காணும் பொழுதுகளிலும் அந்திகளிலும் கொடி போல உன்னில் படர்ந்திருப்பேன்”
இப்படித்தான் என் காதில் மெல்ல நீ விசும்பிக் கொண்டிருக்கிறாய்.....
ஒரு இருள் படர்ந்த, இருப்புக்கள் அற்ற சூனிய வெளியில் உன் ஒற்றை குரலில் வாழ்கிறேன்...
உன் குரலை தவிர இங்கே எதுவும் இல்லை, உன் குரல் மட்டுமே நிலைத்திருக்கிறது...
உன் குரல் அங்கே எனக்குள் ஒலிக்கிறதா, இல்லை நான் உன்குரலில் கரைந்துக் கிடக்கிறேனா....
புரியாத மயக்கத்தில் சிதைந்து கிடக்கிறேன்....
தீயாய் எரிகிறாய் நீ....
அதில் விறகாய் கருகுகிறேன் நான்...
விறகில் எழுந்ததா இந்த தீ... இல்லை தீயால் கருகியதா விறகு...
இரண்டின் முடிவிலும் இரண்டும் இருக்க போவதில்லை...
அதுவே நம் உன்னத காதல் கண்மணி...♪♪♪


Sunday, 29 January 2017

நட்சத்திரங்கள் சிதறிய நேற்றைய இரவு



நட்சத்திரங்கள் சிதறிய
நேற்றைய இரவில்
நீண்டுக் கிடந்த பாதையின் வழியே
இறுகப்பற்றி நடந்தன நம் ஆன்மாக்கள்.
உன் கண்ணீரில் வழிந்துக் கொண்டிருந்த வலியை
என் வார்த்தைகள் சுமந்துக் கொண்டிருந்தன.
என் வார்த்தைகளில் எஞ்சிக்கிடந்த தனிமைகளை
உன் புன்னகை நிரப்பிக்கொண்டிருந்தது...
‘‘பரவசம் தருகிற ஸ்பரிசங்கள்’’
நம் வானங்களில் மிதந்த இறகுகள் அவை...
மௌனங்களுக்குள் மறைந்துக் கிடந்த
நேசத்தின் வருடல் அவை...
‘’நாம் மிக தொலைவில் இருக்கிறோம்’
நம் வாசனைகள் மிக அருகில் இருக்கின்றன...
இது அவர்கள் இல்லாத ஒரு உலகம்.
விம்பங்களால் செதுக்கிய ஆன்மாக்கள்
சந்திக்கும் ஒரு கனவு வெளி,
கவலைகள் இல்லாத ஏகாந்தம்.
‘’நான் எனும் காட்டை மெல்ல திறக்கும் தாழ் நீ’’



Wednesday, 25 January 2017

அழகான திமிர் உனது

உன்னை போலவே
உன் திமிரும் மிக அழகானது
யஷோதரா.

உன் அழகை, 
ரம்மியமாய் மாற்றும்
குங்குமப் பொட்டை போல
உன் நெற்றியில் ஒரு முத்தத்தால்
உன்னில் படிந்து விடுகிறேன்...

யுகங்களின் தவங்களை
கலைத்துவிடும்
உன் தெளிந்த கண்களும் அதன் திமிரும்
என்னை உன்னில் சிறை வைத்திருக்கிறது...

அழகான திமிர் பிடித்தவளை
எனக்குள்ளே கொண்டாடுகிறேன்...
உன் காதலெனும் காற்றில்
ஒரு இறகாய் மிதக்கிறேன் என் யஷோதரா...



Thursday, 12 January 2017

அன்பின்_எழுத்து

ஒரு யுகம் தாண்டிய
கவிதைக்கான எழுத்துக்களை
சேகரித்து கொண்டிருக்கிறான் அவன்.

ஒவ்வொரு எழுத்துக்களும்
அவனால் நிர்வாணப் படுத்தப்படுகிறது,
இப்போது அவை,
அடாயளங்களும் மதங்களும் இன்றி
வெறும் எழுத்துக்களாகவே
தனித்து நிற்கின்றன...

ஆடைகளால் அடையாளம் கொடுக்கப்பட்ட
பாலினம் இன்றி சுதந்திரமாக சுத்தமாக
கிடந்தன அவைகள்...

நானும், அவனும்
ஒவ்வொரு எழுத்துக்களாய் சுமந்து
கண்ணீரின் முடிவுகளில்
தொடங்கிய ஒரு நதியில்
அவைகளை கழுவி நிறங்களை
போக்கிக் கொண்டிருக்கிறோம்...

பேதங்கள் களைந்த எழுத்துக்களை
முத்துக்களை போல
சேகரித்துக் கொண்டிருக்கிறோம்..

அந்த முத்துக்களின் மீது,
அன்பையும், நேசத்தையும், காதலையும்
செதுக்கி எனக்குள் பதித்து விடுகிறான்
அவன்.

இப்போது அன்பின் யுகத்தை தேடி
என்னை நான் கடந்துக் கொண்டிருக்கிறேன்.

Wednesday, 4 January 2017

அவன்_எனும்_கவிதை.




காதல் நீர்த்த சதைகளின் மீதான
காமத்தை பற்றி அந்த இரவில் அவன்
பேசிக்கொண்டே இருந்தான்...

மேகங்கள் நட்சத்திரங்களை மறைத்து வைத்த
பிணிகொண்டு நீளும் யாமமது...

என் பருத்து செழித்த முலைகளின் மீதும்,
ஒரு யுகத்தின் தாகம் தீர்க்கும் இதழ்களின் மீதும்
படியாத பார்வை....
உன்மத்தமான வெறுமைக்குள் படர்ந்திருந்த
ஆன்மாவை, கண்களினூடே
கரைத்துக் கொண்டிருந்தது....

முல்லை கங்குலென இருண்டு கிடக்கும்
மனமெங்கும், படர்ந்து பறக்கும்
மின்மினிகளை போல
ஒரு ரம்மியமான காதல் அவன் மீது
ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது....

நிலவில் இருந்து வந்தவன் அவன்...
செட்னாவிலிருந்து கனவுகளில் வந்தவள் நான்..

ஒரு பெண்ணின் ஆன்மாவை
ஸ்பரிசிக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் பார்வையும், வார்த்தையும்
மாயைகளில் வார்க்கப்பட்டவை

நீண்ட பெரும் கதைகளில் என்னை
சிறை வைத்திருக்கிறான்....

இது அவன் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை...
அவன் எனும் ஏகாந்தத்தில் இருந்து
விழுந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள்...
இப்போது என் வாசிப்பின் பிரங்ஞையை முடித்துக்கொண்டு
காதல் எனும் வெறுமையில் வழிந்துக் கொண்டிருக்கிறேன்...

#மிஸ்பாஹுல்ஹக்.