Tuesday, 1 August 2017

எதிரிகளை பக்கத்தில் வைத்திருக்க நினைக்கிறேன்..

எதிரிகளை பக்கத்தில்
வைத்திருக்க நினைக்கிறேன்..
அவர்களின் பலவீனமும்
என் பலமும் தெரியும்,
பிழைத்துக் கொள்ளலாம்...
துரோகங்கள் மறைந்த நேசிப்பை..
வஞ்சகம் நிறைந்த உறவை..
பொறாமை பொதிந்த பார்வைகளை..
ஏளனம் மிகைத்த புன்னகையை
இந்த வழிப்போக்கனுக்கு
புரிய இன்னும் தெரியவில்ல..

மறந்துவிடுதல்


எல்லாவற்றையும்
மறந்துவிட ஆசைதான் எனக்கு...
எல்லாவற்றையும் 
நினைவில் வைத்திருக்கவும் ஆசைதான் எனக்கு..
இரண்டுமே வேண்டுமெனில்,
அல்லது இரண்டில் ஒன்றேனும் வேண்டுமெனில்
இயற்கையை கடக்க வேண்டுமாம்..
ஆனால் சில போது;
மறக்கக்கூடாததை மறந்தும்,
மறக்க வேண்டியதை நினைத்தும்
குற்றம் புரிந்துவிடுகிறேன்...
நீ சொல்வது போல
நான் குற்றம் புரிந்துவிடுகிறேன்...
அந்த நாய்கள் ஓயாமல் என்மீது குரைப்பதையும்,
அந்த நாய்கள் என்மீது மூர்க்கமாய் பாய்வதையும்,
அந்த நாய்கள் கடித்து குதற முனைவதையும்,
அந்த நாய்கள் என் மீது மூத்திரம் கழிப்பதையும்,
அந்த நாய்கள் என் ஆடைகளில் மலம் கழிப்பதையும்,
சிலபோது மறந்து விடுவதால்தான்
மாமிசங்கள் எரிந்து, அவை பசிபோக்க
இன்னு அந்த பாதையில் நடக்கிறேன்...
நான் மறந்து விடுவதும்,
நினைத்துக்கொண்டிருப்பதும்
என் குற்றம்தான்...
என் மீது புன்னகை வீசிய உதடுகளையும்,
என் மீது கழிவிரக்கம் கொண்டு பார்த்த கண்களையும்,
என் தனிமைகளில் இறுகப்பற்றிய கரங்களையும்,
என் உடைதல்களின் வருடிக்கொடுத்த விரல்களையும்,
என்னால் எப்போது மறக்கமுடிவதில்லை...
அவை மீண்டும் மீண்டும் பெரும் கால்களாய் மாறி
என்னை எட்டி உதைத்து மிதித்தாலும்,
பதித்துக்கொண்ட பிம்பங்களை
என்னால் மறக்க முடிவதில்லை...
இருள் மட்டும் சூழ்ந்த பாதைகளில்,
நிழல்களின் திசையை மட்டும் நினைக்கச் சொல்கிறாய்...
வறண்டு கிடக்கும் பாலையில் நிற்கையில்
பனித்துளிகள் பற்றி கவிதை கேற்கிறாய்...
புயலில் வீழ்ந்த மரத்திடம்
வசந்தங்களை மட்டும் நினைக்க சொல்கிறாய்,
உறக்கம் இழந்தவனிடம்
கனவுகளை மட்டும் காண சொல்கிறாய்...
இப்படித்தான் உன்னிடம்
மறக்கக்கூடாததை மறந்தும்,
மறக்க வேண்டியதை நினைத்தும்
குற்றம் புரிந்துவிடுகிறேன்...
நீ சொல்வது போல
நான் குற்றம் புரிந்துவிடுகிறேன்...
மறந்துவிடுதல்
என்பது எது
மறந்துவிடுகிறேன்...