Sunday, 23 April 2017

என்னில் ஜீவனாய் வழியும் ஆபகை நீ..

அரிதம் படர்ந்த தனிமையொன்றில்
ஆவி நீர்த்த பிண்டமாய் கிடந்திருந்தேன்...
அறுதிசையற்ற பெருவெளி,
சூன்யங்களில் சிக்கிய கனவு
கண்களில் அடங்கிய பெரும் நிசப்தம்...
அல்லியனை போல நான்
மீண்டும் தனிமை மிகைத்த ஆரணியத்தில் கிடந்தேன்...
காதல் எனும் தாழ்திறந்து
மெல்ல என்னுள் கசிந்துக் கொண்டிருக்கிறாய் யஷோதரா!!
இந்த வெறுமையை
உன்னத காதலால் நிரப்பிவிடுகிறாய் நீ...
அடல் கடந்துவிட்ட என் அங்கிதங்களின் மேல்
அங்கையின் ஸ்பரிசத்தில் மாயம் செய்கிறாய்...
“யுகங்களை கடந்துவிடுகின்ற
ஒரு முத்தம் வேண்டும்”
மெய்தழுவி ஒரு நீண்ட பெரும் முத்தம்...
யாமங்களில் குவியும் நிஷ்டையை போல
போதை மிகுந்த ஒரு முத்தம் வேண்டும்...
முத்தங்கள் கடத்தும் ஜீவனின் சூட்சுமம்
இரவின் கடலை போல மிக்க ரகசியமானது யஷோதரா...
அந்த கடலின் ஆராவம்
நம் கனவுகளுக்குள் ஒரு விசும்பலை போல படர்கிறது
கேட்கிறாயா..!!!
என்னில் ஜீவனாய் வழியும்
ஆபகை நீ..
இருள் படர்ந்த இந்த அனங்கமெங்கும்
உன் புன்னகை நட்சத்திரங்களை செய்துகொண்டிருக்கிறது..
எங்கிருந்தாய் என் கண்மணியே...

No comments:

Post a Comment