சினிமா

#Fifty_Shade_of_Grey

உன்னதமான ஒரு நேசம், ஆழமான ஒரு காதல், இந்த அழகானஉணர்வுகளை ஆன்மாவில் இருந்து வெளிப்படுத்தி பகிர்ந்துகொள்ளும் மேன்மையான வழிகளில் அதி உச்சமாய் இருப்பது காமமும்,கலவியும் தான். இதிலிருந்து நீட்சிபெறும் எல்லா வழிகளும் சுகம் நிறைந்த அற்புதமான ஒரு வாழ்க்கைக்கு இழுத்துச் செல்லும்.
சுவர்க்கத்தின் பாதை இங்கிருந்தே ஆரம்பிக்கிறது 

இதுவல்லாது காதலற்ற வெறும் சதைகளின் மீது படரும் விரகத்தை இயல்பான மனித குணமாக பிம்பப்படுத்திக் கொண்டு ஒரு வக்கிரம் பிடித்த மிருகத்தை உள்ளே வளர்த்துக் கொள்கிற மானுடன் தன் அசலான யதார்த்தை இழந்து விடுகிறான்.....

விந்தையான கற்பனையுலகில் வாழ்கின்ற மனிதர்களில் சிலர் சாத்தியமில்லாத உணர்வு வழிதல்களை பலவிதமான நிறங்களாக பிரயோகித்து சக மனித விலங்குகளில் வர்ணம் தீட்டி அந்த உணர்வழிக்குள் அவன் ஆசைகளை அழுத்தி மந்தமான மயக்கத்தில் எப்போதும் ஆகி விடுவதே இங்கே அரங்கேறும் நிதர்சனம்...

இந்த வக்கிரம் நிறைந்த சமுத்திரங்களில் மனங்கள் சலனப்பட்டு கிடக்கிறது.

வன்மம் நிறைந்த காமத்துக்கும், காதல் என்கின்ற மேன்மைத்துவ உணர்விற்கும் இடையிலான ஒரு அழகான திரைப்படம் Fifty Shade of Grey.

ஆனஸ்டேஷியா இருபத்தொரு வயது நிரம்பிய ஆன்மாவை ஊடுருவும் தெளிந்த கண்களைக் கொண்ட அழகி.தனது நண்பிக்காக இருபத்தேழு வயதுநிறைந்த கவர்ச்சியான ஒரு வெற்றிகாணும் நிறுவனத்தின் இளம் உரிமையாளரான கிரிஸ்டியனை தங்கள் கல்லூரி சஞ்சிகைக்காக நேர்காணல் செய்யச் செல்கிறாள்...

அந்த நிமிடங்களில், அவள் மீது அவனுக்கு ஆசையும்,அவன் மீது அவளுக்கு ஒரு வித ஈர்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.சந்திப்புக்கள் தொடரக்கூடாதா என்கிற ஆழ்மனத்தின் ஆசை இந்த நேர்காணலின் நீட்சியாக போட்டோ ஷூட், இன்னும் கொபி ஷொப் என நிகழ்காலத்தை எட்டாத மரபான நிகழ்வுகளைப் போல நீள்கிறது...

பெருத்த செல்வமும் செல்வாக்கும் நிறைந்த இளைஞன், கல்லூரி முடிய மாலைகளில் ஒரு கடையில் வேலைபார்க்கும் மாணவி.இந்த இடைவெளிக்குள் நீள்கின்ற சந்திப்புக்கள், அளந்து பேசும் வார்த்தைகள், அவை கொண்டுள்ள ஆழ்ந்த அர்த்தங்கள் ஒரு பார்வையாளனை ஒரு வித மன நிலைக்குள் இழுத்து வைத்து விடுகிறது...

இந்த உரையாடல்களின் இறுதியில் அவளுக்கு வேறு காதலர்கள் இல்லை என்பதை அவன் உறுதிசெய்து கொள்கிறான்.

வழமையான ஒரு மேலைத்தேய இரவில் அவள் தன் நண்பர்களோடு இரவு விடுதியொன்றில் கொஞ்சம் அதிகமாகவே மதுவருந்தி விட்டு அவனுக்கு அழைப்பெடுத்து அவனுடைய ஆதிக்க மனோபாவத்தை கேவலப்படுத்தும் தொனியில் பேசிவிட்டு அழைப்பை துண்டிக்கிறாள்.இந்த நிகழ்வானது அதுவரை அந்தச் சந்திப்புக்களில் அவன் அவள் மீது திணிக்க முற்பட்ட ஆதிக்கங்களின் வெறுப்பாக வெடிக்கிறது.

அந்த நிமிடமே அவளைத்தேடி புறப்படும் அவன் வந்து சேர்கின்ற நேரம் அவளது நண்பன் அவளை முத்தமிட முனைகிறான்.இதன்போது ஏதோவொன்றின் மிகைப்பு முத்தமிட முனைந்தவனை இவன் மூலமாக தள்ளி விரட்டி விடச்செய்கிறது...
(பலமுள்ளவை வாழும் உலகம் இது)

அதீத போதையில் மயக்கமுற்று போகிற அவள் விழித்துப்பார்க்கின்ற போது அவனுடைய ஹொட்டல் அறையில் அவன் கட்டிலில் கிடக்கிறாள்.ஆடைகள் மாற்றப்பட்டு இன்னொருவன் படுக்கையில் கிடப்பது அவளுக்கு ஒரு வித அசௌகரிய உணர்வை கொடுக்கிறது.அவள் அவளைப்பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதை இவன் அவள்மீதான அக்கறையோடு அவளுக்கு சொல்கிறான்.

"நான் காதலிப்பதில்லை, ஆனால் புணர எத்தனிப்பேன்.உனக்கு விருப்பமா??? அப்படி விருப்பமெனில் நாம் எழுத்துமூலம் ஒப்பந்தம் போடலாம்"
இப்படி உரையாடல்கள் நீள்கின்றன...

காதல் இல்லாமல் காமம் எப்படி சாத்தியம்? அது எத்தகைய உணர்வு? அது எதுவரை தொடரும்? இப்படிப் பல கேள்விகள் ஒரு பார்வையாளனாக எனக்குள் விரிகிறது...

இலக்கியம் படிக்கும் அவளுக்கு"Tess of the d'Urbervilles" இன் முதல் பதிப்பிலிருந்து ஒரு பிரதியை அனுப்பி வைக்கிறான். அவளுக்கு அது பெரும் பொக்கிஷமாய் தோன்றிய போதும் அதை திருப்பியனுப்பி விடுகிறாள்...
அவளுக்குள் அவன் மீது காதல், அவனுக்கு அவள் மீது காமம்...

அற்புதமான இரவொன்றில், அவன் தனக்கு சொந்தமான சிறிய வானூர்தியில் (Charlie Tango) அவளை, அவளுக்கு மிக பிடித்தமான நகரமொன்றில் உயர பறந்து ஒரு பரவசமான அனுபவத்தை அவளுக்கு கொடுக்கிறான்... அவளுக்கு அவனை நிறையவே பிடித்துப் போகிறது...

இப்போது அவளை அவன் இல்லத்திற்கு அழைத்து வருகிறான்.தனிமை நிறைந்த ஆடம்பராமான இல்லம் அது.அந்த இறுக்கம் நிறைந்த ஆணிடமிருந்து இசை வழிவதையும் அதில் பெருத்த சோகம் அழுவதையும் பெரும் ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் பார்க்கிறாள் அவள்.

அவன் தன் இயல்பான உணர்வுகள் தாண்டிய பாலியல் ஆசைகளை அவளிடம் விளக்குறான். அந்த வேட்கையை தீர்க்க அவன் வேட்டையில் சிக்கும் மான்களை பாலியல் கொடுமைகள் செய்து தன் அசாதாரண ஆசையை பூர்த்தி செய்யும் பிரத்தியேக அறையை அவளுக்காக திறந்து காட்டுகிறான்...

அவளுக்குள் பெரும் பயத்தை கொடுக்கும் இந்த விந்தையான உலகத்துக்குள் அவள் ஏனோ நுழைய சம்மதிக்கிறாள்...

விசித்திரமான அவன் மிருக இச்சையை காதல் கொண்ட அவள் மனம் விரும்பியேற்கிறது. அவளுக்கு அது அதீத சுகத்தை கொடுக்கிறது.அந்த புணரும் இரவுகள் அவளை சுகங்களின் உச்சபட்ச புள்ளிகளில் வைத்திருக்கிறது. அந்த சின்ன சின்ன கொடுமைகளை அவள் ரசித்து ஏற்கிறாள்.
ஆனால் ஒவ்வொரு புணர்ச்சியின் பின்னும் எப்போதும் அவளோடு அவன் ஒரே படுக்கையில் உறங்குவதில்லை.தன் படுக்கையில் கூட தன் Privacy ஐ வைத்திருக்கும் மர்மம் நிறைந்த அவன் மன நிலையை உணர முடியாமால் தவிக்கிறாள் ஆனஸ்டேஷியா.

அவனிடமிருந்து ஏராளமான பரிசுகள் அவளை பரவசப்படுத்துகிறது.தன்னை மிக உறுதியான மனிதனாக நினைத்துக் கொண்டிருக்கும் அவன் அவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பதை மெதுவாக உணர ஆரம்பிக்கிறான்.

அந்த ஆதிக்க திமிர் ஆண்மை தன் பலவீனமான பெண்மையிடம் தோற்றுப் போகிறது...

இப்படி ஒருவனை இந்த நிகழ்காலத்தில் இழுத்து வந்து வைத்திருக்கும் அவன் கடந்த கால வாழ்க்கை, அவமானங்கள், அனுபவங்கள், அவன் சந்தித்த மனிதர்கள் என்பதை கதை அழகாய் பேசிப் போகிறது...

இந்த திரைப்படம் பேசுகின்ற BDSM (இதைப் பற்றி தேடிப் பார்க்கலாம்) , கதை பின்னப்பட்டுள்ள bondage, discipline, dominance and submission, sadomasochism போன்ற கருக்கள் இந்த திரைப்படத்திற்கு அடிப்படையாக கொள்ளப்பட்ட Fifty Shade of Grey நாவல் வெளிவந்த பின் பெரும் சர்ச்சைகளையும் கருத்தாடல்களையும் தோற்றுவித்தது....

இந்த நாவலின் வெளியீடும்,அதன் எதிர்பாராத பிரபல்யமும் BDSM சார்ந்த பாலியல் உறவுகளால் ஏற்படும் உடலியல் காயங்கள் மற்றும் பாலியல் உபகரணங்களின் பாவனைகளை உயர்த்தியதாக பேசப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டோடு பார்க்கின்ற போது 2012 இல் 50% வீதமாக உய்ர்ந்திருந்ததாக புள்ளி விபரங்கள் பேசிற்று.

இந்த திரைப்படம் அழுத்திச் சொல்லும் தன் இச்சை கொள்கின்ற உடல்மீது ஆதிக்கம் செலுத்தும், அவர்களை அடிமை படுத்தும், அவர்கள் உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் மதிப்பு கொடுக்காத வக்கிரம் நிறைந்த மனப்பான்மையை தூண்டும் dominance and submission கருப்பொருளுக்கு எதிராக பல கண்டனக் குரல்கள் பல அமைப்புக்களில் இருந்து எழுந்தன.இந்த நூலும் இந்த திரைப்படமும் பெண்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானதாக பேசப்பட்டது.
ஆனாலும் பாலியல் உணர்வு சார்ந்த பல ஆய்வுகளுக்கும், காத்திரமான உரையாடல்களுக்கும் இந்த நாவலும் திரைப்படமும் வழிதிறந்தது என்று சொன்னால் மிகையாகாது...

ஆபாச (pornographic) திரைப்படமாக வகைபிரிக்கப்பட்ட இந்த திரைப்படமும் அதன் நாவலும்,ஆபாச திரைப்படம் சமூகத்தில் ஏற்பட்டுத்தும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்கவில்லை.

பெண்ணுடல் சார்ந்த பிரங்ஞைகளையும், காமம் பற்றிய பிழையான கற்பனைகளையும் அசாத்தியமான புள்ளியில் திறக்கிறது இந்த ஆபாச(porn) திரைப்படங்கள். இந்த மாயை நிறைந்த காட்சிகள் ஒரு யதார்த்தாமான நிதர்சனம் என இன்றைய இளம் சமூகத்துக்குள் பதிந்து போயிருக்கிறது... அதை அடிப்படையாக வைத்து அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நீள்கிறது.இதனால் இளம் வயதிலேயே ஒரு பால் புணர்ச்சியாளர்களாக அவர்கள் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட சாத்தியம் இல்லாத ஹீரோயிசத்தை காட்டும் பொதுவான சினிமாக்களைப் போலவே இந்த ஆபாச திரைப்படங்களும் மிகைப்படுத்தப்பட்ட இயல்புகள் மீறிய காட்சிகளை விரித்து பார்வையாளனை ஒரு மந்தமான மனநிலைக்கு இட்டு செல்கிறது.

அந்த காட்சிப்படுத்தல்கள் எல்லா சினிமாக்களை போலவே யுக்திகள் நிறைந்தவை,இயல்பான உணர்வுகளை தாண்டியவை.அங்கே பங்கேற்கும் நடிகர்கள் அதற்காக உடலியல் ரீதியாக செயற்கையாக தயார்படுத்தப்பட்டவர்கள் என்பதையெல்லாம் pornography சினிமாக்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இன்றைய தலைமுறையும், இன்னும் மூத்தவர்களும் உணர்ந்து கொள்வதில்லை...

இது சார்ந்து அடிமைப்பட்டவர்களை உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், எப்படி பிறழ்வு கொள்ளச் செய்கிறது, இயல்பான வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை நம் சமூகம் வெளிப்படையாக பேசுவதுமில்லை...
(சரி படத்திற்கு வருவோம்)

அவனுடைய அதிகார ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு அவனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் அவளுக்குள் ஆயிரம் குழப்பங்கள் உருவாகிறது...
அவள் அவனிடம், இந்த விந்தையான உறவில், தான் உடன்படிக்கையை மீறினால் என்ன தண்டனை தருவாய், அதை செய் என வற்புறுத்த, அவளை நிர்வாணமாக்கி ஒரு தடித்த அரைக்கச்சால் அடிக்கிறான்.அந்த வலி அவளின் ஆன்மா வரை ஆழ இறங்கிவிடுகிறது.
அவர்கள் இருவரும் மனம் ஒவ்வாதவர்கள் என்பதை உணர்கிற அவள், மனமுடைந்து அவனை நீங்கிப் போகிறாள்.அப்போது அவனுக்குள் ஒரு காதலின் வலி சில்லென பரவிப் போகிறது.
அந்த காதலின் வலி அவன் அவனை இழக்கச் செய்கிறது.

எது எப்படியோ ஒரு பெண்ணின் உன்னதமான காதல் இந்த உலகத்தில் எதையும் செய்ய வல்லமை பெற்றது, இந்த வாழ்க்கையின் ரகசியம் ஒரு உன்னதமான காதலில் இருந்து ஆரம்பிக்கிறது என இந்தத் திரைப்படம் பேச முனைந்தாலும் போர்னோகிராபி பற்றி விவாதிக்க நிறைய இருக்கிறது என்பதும் இதன் மறைமுக வெளிப்பாடே...

No comments:

Post a Comment