Wednesday, 14 December 2016

என்_தொடக்கம்: மரணம்.

நீ எதிர்பாராத நிமிடமொன்றில்
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்...
அதிர்ச்சியின் உச்சத்தில் நீ உறைந்துபோகும்
அந்த கணம்,
சடுதியாய் வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே நிகழ்ந்துவந்த
முகாரி இது...
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…
என் காட்சிப் பிழைகளை
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில்
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்க முனைகிறேன்...
மேய்ப்பு செழித்த பசுமைகளில்
இடையனை மறந்து விட்ட ஆடுபோல...
மாயைகளில் உழன்று திரிகிறேன்....
என் பட்டிக்கு அவன் என்ன அழைத்துப் போக
தேடிவரும் அஸ்தமன நேரமிது....
என் கைகளில் கருமை படர்ந்திருக்கிறது...
என் கண்களில் வெறுமை நிறைந்திருக்கிறது...
என் உதடுகள் வறண்டு கிடக்கிறது....
பாவங்களின் பெரும் சுமையை
ஒரு சிலுவையைப் போல என் தோள்கள் சுமந்திருக்கிறது...
இப்போது நான் இழந்து,
பின் மறந்து விட்ட என் புன்னகையை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் மரணத்தை நான் அலங்கரிக்க
அதை உடுத்தியாக வேண்டும்...
உன்னிடம் அது இருந்தால்
என்னிடம் கொடுத்து விடு...
என்னை நான் அலங்கரித்தாக வேண்டும்...
என் வெற்று மதுக்கிண்ணத்தின் கீழே,
ஒரு ரோஜா சருகாகிக் கிடக்கிறது...
வண்ணம் நிறைந்த ஒரு பாட்டம் பூச்சி செத்துக் கிடக்கிறது
பின், ஒரு கருப்பு வெள்ளை கனவில்
நான் மயக்கமுறுகிறேன்....
நிம்மதியாய் நான் உறங்கிப் போன பின்பு
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்...
வெள்ளை துணியில் என்முகத்தை
இறுக முடிக்கிடப்பதை நான் விரும்புகிறேன்...
உன் கண்ணீரில் என் மௌனப்”புன்னகையை”
நீ காண்பதை அப்போது நான் விரும்பவில்லை...
எப்போதும் போல இப்போதும்
நான் தனிமையில் இருக்கிறேன்....
என் கொண்டாட்டத்தில் நீங்கள்
அழுதுக் கிடப்பீர்கள்....
என் பெயரையும் சில நினைவுகளையும்
மட்டும் இங்கே வைத்து...
என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்....
உன் அழகான அந்த இதழ்களின்
ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்...
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு....


Tuesday, 29 November 2016

சொட்டுச் சொட்டாய்
தீர்ந்த இரவு,
காதலால் நிரப்பிய கனவை
மிச்சம் வைத்திருக்கிறது...!!

Monday, 28 November 2016

மாய வதை


என் கண்களும் நரம்புகளும் புடைக்க,
என் கால்கள் துடிக்க,
உன் கைகளாலோ, இல்லை ஒரு கையிற்றாலோ
கழுத்தை நெரித்து இறுக்கி,
நீ என்னை கொன்றிருக்கலாம்.


என் குரல்வளையை அறுத்தோ,
என் மார்பிலும், வயிற்றிலும்,
இன்னும் கிடைக்கின்ற எல்லா உறுப்புகளிலும்
உன் வார்த்தைகளை விடக் கூர்மையான ஒன்றால்
சாகும் வரை குத்தி குதறியிருக்கலாம்.

என் நரம்புகளும், கலங்களும்
இறுக்கிப்பிடித்து,
உடல் முழுதுமாய் துடித்து,
வாயில் நுரைத்தள்ளி சாக
எனக்குள் நீ நஞ்சூட்டியிருக்காலம்.....

என் பின்னந்தலையும் மூளையும் சிதற,
என் நெற்றிப் பொட்டில்
நீ அழுத்தும் துப்பாக்கி ரவையால்,
விசுக்கென பரவும் ஒரு நொடி வலியில்,
என் அமைதியை நீ பார்த்திருக்கலாம்...



என் மனதைவிட கனமானவொன்றால்
என் மூட்டுக்களும், எலும்புகளும்
மண்டையோடும்,
உடைந்து, சிதைந்து நான் மாண்டு போகும் வரை,
மெல்லிய ஸ்பரிசங்கள் படர்ந்த
உன் கைகளால் கொன்றிருக்கலாம்...

என் கைகளை பின்னே இறுகக்கட்டி,
என் ஓலம் கேட்காதபடி என் வாய்க்குள்
உன் மௌனங்களை திணித்து,
என் உடல் துண்டாகி சிதறும்வன்னம்
தண்டவாளமொன்றில்  கிடத்தி வைத்திருக்கலாம்....

இல்லை,
பொசுக்கென பற்றிக்கொள்ளும்
என் கோபத்தைப்போல ஏதோவொன்றை
என்மீது உற்றி,  என்னை எரித்துவிட்டிருக்காலாம்.


என் கொடுரமான மௌனங்கள் செய்யும்
மாய வதைக்காக
நீ என்னை எப்படியோ கொன்று,
பழிதீர்த்துக் கொள்...
என் வார்த்தைகளை மீள முடியாத
ஏகாந்தமொன்றில் புதைத்துக்கொண்டிருக்கிறேன்.


#மிஸ்பாஹுல்ஹக்










Friday, 18 November 2016

கவிதைகள் விற்பவன்.



கவலைகள் சுமந்து., கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
கடன்களை சுமந்து, கடமைகளை சுமந்து....
வலிகளை சுமந்து, பலிகளை சுமந்து
காதலை சுமந்து,  தீராத ஆசைகள் சுமந்து....
நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....

வேகமாய் அவனை கடந்து போகிற
விந்தையான ஒவ்வொரு முகமும்
புத்தகங்களின் பக்கங்களைப்  போல....
மெதுவாய் அவன் புரட்டிக்கொண்டிருக்கிறான்
கருப்பு வெள்ளை எழுத்துக்கள்
இன்னொரு உலகத்தை திறந்து விடுவதைப்போல
ஒவ்வொரு முகமும் அவன் கவிதைகளை செய்துகொண்டிருந்தது....


யாரோ மிச்சம் வைத்து போடுகின்ற உணவு
அவன் வயிற்றை நிரப்பி விடுகிறது....
அவமானங்களை அணிந்துக்கொண்டவனை
நிர்வாணம் அலங்கரிகிறது....
பேரிரைச்சல் தரும் இந்த சாலைகள்
அதில் கனவுகள் அமர்ந்து செல்லும் வாகனங்கள்....
மனித விலங்குகளின் ஆரவாரங்கள்
அவன் தவத்தை கலைத்திருக்கவில்லை....
இந்த சாலையோரம் அவனுக்கு உறக்கம் கொடுத்தது....
தேவைகள் அற்றவனிடம் நிம்மதி இருக்கும் என்பது
அவனை போன்றவர்கள் அறிந்து வைத்திருந்த ஞானம்,

தனிமைப்படுத்திக் கொள்ள
காடோ, கற்குகையோ, மலைகளோ
தேவையில்லை.....
சாலையோரங்களில் அவனைப் போன்றவர்களை
இந்த மனிதர்களே தனிமைப்படுத்தி விடுகிறார்கள்...


அழுக்கு படிந்து நாற்றம் வீசும் குமட்டும்  அவன் மேனி
இந்த வாழ்க்கையின் குறியீடு.
அடிப்படையில் மனிதன் அசுத்தமானவன் என்பதையும்
அழுகிபோகும் பலவீனம் என்பதையும்
அவனைக் கடக்கும் அந்த முகங்களுக்கு
அவன் உணர்த்திக்கொண்டே இருக்கிறான்....


அவன் இடுப்பைச் சுற்றி, சொருகி கிடக்கும்
பைகளில், மெத்த கனவுகள் கிடந்தன....
அது எப்போது யாரால் கண்டவைகள் என
அவனுக்கு தெரியாது....
அந்த கனவுகளின் விசும்பல்கள் மட்டும்
அவனுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது....

கவலைகள் சுமந்து, கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
காதலை சுமந்து, நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....
அவனோ அந்த முகங்களில் இருந்து வழியும்
கவிதைகள் சேகரிக்கிறான்....

அதோ அந்த பைத்தியம்,
அவன் நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறான்
அந்த சாலையோரம்....

#மிஸ்பாஹுல்ஹக்.











Sunday, 6 November 2016

எதிலிருந்து நான் விழித்தேன்...

திடுகிட்டு விழித்துப்பார்த்த போது,
அவள் வார்த்தைகள்
சிதறிக் கிடந்த ஒரு வெளியில்
என் கனவுகள் தனித்து நின்றன....

எதிலிருந்து நான் விழித்தேன்...
நான் உறங்கியாதாய் எனக்கு ஞாபகம் இல்லை...
நான் விழித்துக் கிடந்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை...
எதிலிருந்து நான் விழித்தேன்...

சிதறிக் கிடக்கிற
அவள் வார்த்தைகள் பொறுக்கி,
என் எழுத்துக்களில் பொருத்திக் கொள்கிறேன்...
செத்துக் கிடந்த என் எழுத்துக்கள்
இப்போது மெல்ல உயிர்பெற்று எழுகிறது....

ஒரு அண்டம் போல கனத்துக் கிடக்கிறது
அவளின் வார்த்தைகள்...
பெரும் காதல் கொண்ட இதயம்
ஒரு பேரின்பமாய் அதை தாங்கிக் கொள்ள கூடும்...
இங்கே எல்லாவற்றின் இரகசியமும்
தீராத ஒரு காதல் தானே...

உண்மையில் எதிலிருந்து நான் விழித்தேன்...
இந்த மாயக் கேள்வி
என் கனவுகளை இரவில் இருந்து இழுத்து
தனிமைகளால் சித்ரவதை செய்கிறது...

வெண்மை மட்டுமே படர்ந்த
ஒரு தனித்த உலகில்....
அவள் வார்த்தைகள் கொண்டு
உன்னதமான என் காதலை செதுக்கிக் கொண்டிருக்கிறேன்....
அது மெல்லிய ‘ஆபேரி’யாக ஒலித்துகொண்டே இருக்கிறது...



Wednesday, 19 October 2016

ஷெனாயில் மிதக்கும் உலகம்...

பின்னிரவொன்றில் விழித்துக்கொண்ட
இரு விழிகள்...
இன்னும் உறங்க மறுத்து,
சிவந்து கனன்று எரிந்துக் கொண்டே இருக்கிறது...

அவன் காதுகளில் மெதுவாய் கதைபேச,
விரகம் படிந்த இரவுகளில்
நிர்வாணமாய் திரியும்
ஒரு காற்றை அவன் அறைக்குள் நுழைத்து விடுகிறேன்...

அந்த தனிமை,
கனன்று எரியும் இந்த விழிகளின் ஒரம்..
ஒரு புழுவைப்போல் நெளிந்து வழியும்
கண்ணீரால்,
வறண்டு வெடித்த இவன் உதடுகளை
மெதுவாய் வருடக்கூடும்,

அபினி தரும் பிம்பங்களின் கிறக்கம் மட்டும்,
ஒரு கனவுலகத்தை
இவன் கண்களுக்குள் இழுத்து வருகிறது...
ஷெனாயில் மிதக்கும்,
கருப்பு தேவதைகள் நடனமிடும் கனவுலகது...

வர்ணங்களை தொலைத்த
ஓவியங்களால் அலங்கரித்து செய்த
அந்த உலகில்
தனிமைகளில் கதை பேசும் காற்றுக்கு,
தேவதையாய் உருவம் தீட்டபடுகிறது...

இப்போது, என் கண்களை
இறுகமூடிக் கொள்கிறேன்,
கண்ணீரோடு வழிந்துக் கொண்டிருக்கிறது,
இருண்டு மறைந்த அந்த கனவின் உலகம்...

#மிஸ்பாஹுல்ஹக்



Tuesday, 30 August 2016

ஒரு மேகமாய் மாறிவிடுகிறேன்

சிறுகச் சிறுக
என் புன்னகையை பறித்துக் கொண்டது
உன் வார்த்தைகள்....

வேகமாய் ஆயிரம்  ஆயிரம்
முகங்கள்  கடந்துபோகும்
ஒரு  பெருநகரத்தின்  
சாலையோரம்,
ஒரு  சடம் போல்  அமர்ந்திருக்கிறேன்...

எனக்குள்ளே
இரைந்துக்கொண்டு இருக்கும்
உன் வார்த்தைகள் தவிர,
என்னை  சுற்றி  எல்லாமே நிசப்தமாய்
இருப்பதான  பிரம்மையில்..

இந்த  பித்து கொண்ட இதயம்
எதை தேடியலைகிறது  உன்னிடம்,
ஒரு முறை  உடைந்த  பின்
அது  உடைந்தது தான்...
ஒரு  முறை செத்த பின்
அது  மாண்டது தான்....

ஒரு வலி கருவறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த இதயம்  தொலைத்தவனை...
எது இந்த  பிணத்தை  ஆசுவாசப்படுத்தும்...
எது  இந்த  கல்லை அழகான  சிற்பமாய்  செதுக்கும்...

என் புன்னகையை
என்னிடம் கொடுத்துவிட்டு
உன்  வார்த்தைகளை  நீயே  கொன்று  விடு...
ஒரு  மேகமாய் மாறிவிடுகிறேன்....


#மிஸ்பாஹுல்ஹக்








Saturday, 2 July 2016

கருப்பு வெள்ளை கதை

தனிமையிலிருந்து  கொண்டுவந்த
இந்த  கருப்புவெள்ளை  கதையின்  மீது
என் வண்ணங்களை  தீட்ட  முனைகிறேன்...

இந்த  கதையில்  ஆங்காங்கே
புதைக்கப்பட்டு கிடக்கும் அந்த  
ஒற்றைப்  புன்னகையின்  சொந்தக்காரனை  
இந்த  பிரதி எங்கும் தேடி  அலைகிறேன்...

வன்மங்களால்  வரண்டுக்  கிடக்கும்
அந்த  நீலக்கண்களில்,
கசியும்  ஏக்கங்களும்
பசியின்  வாட்டாமும்
என்  வர்ணங்களில்  வழிந்து ஓடுகிறது....

இந்த  பிரதியில்  இருந்து  அவனை
பிரித்தெடுக்க  முனைவதை
கதை  சொல்லி  தடுத்துக் கொண்டு இருக்க...
கதைக்குள்ளே  இருந்த என்னையும் சேர்த்து,
இந்த  பிரதியை  கிழித்தெறிந்து  விடுகிறேன்...

அவன்  நானாகவும்
நான்  அவனாகவும்  வேடம்  மாற்றிக்  கொண்டிருக்கலாம்,
இந்த  கதையின் வாசகானாக  அவன்  மாறி
என்னை  அவன் இந்த  கதையில்  காணும் போது
என்ன  நினைப்பான்....

நான்  கிழித்துப்போட்ட  பிரதியில்  
அந்த  நீலக்  கண்கள்  என்னை  வெறித்துப்  பார்க்கிறது...
அந்த  பார்வையில்  என் இரவுகளையும்
அவன்  கனவுகளையும்  நாம்  தொலைத்திருக்கிறோம்...
ஒற்றை  பிரதி  அழிந்த  பின்பும்
ஒவ்வரு  வாசகனின்  பிரதியிலும்
அந்த  வேதனை  வாழ்கிறது...

உன்னை  எப்போதாவது
நான்  அனைத்துக்  கொள்வேன்,
அப்போது  இந்த  பிரதியை  கிழித்துவிட்டதற்காய்
என்னில்  காரிஉமிழ்ந்திடு...

#மிஸ்பாஹுல்ஹக்.

  










Friday, 20 May 2016

என் இருளை கொன்று தின்ற மெழுகுவர்த்தி

என் இருளை கொன்று தின்ற
மெழுகுவர்த்தி
சில கனவுகளில்
வழிந்தொழுகியது...

எங்கிருந்தோ வந்த
சில எழுத்துக்கள்
வார்த்தைகளாய் மாற மறுத்து,
மெழுகுவர்த்தியால்
செத்த இருளில் மறைந்து கொண்டது...

ஒரு புன்னகையில் நாம்
மறைத்துக்கொண்ட
நம் காதலை,
எழுதாமல் நான் விட்டுப்போன
என் டயரியின் பக்கங்கள்
இந்த நிசியில்
கிசுகிசுத்துக் கொள்கின்றன...

இந்த மெழுகுவர்த்தியை
எனக்கு பிடிப்பதில்லை...
சட்டென எரிந்து மடிந்த
தீக்குச்சியை பிடிக்கும் எனக்கு...
என் இருளை மீட்டிக்கொள்ள
இங்கே காத்திருக்கிறேன்
இந்த சர்பங்களின்
நாவுகளை ரசித்தபடி...

என் இதழ்கள்
தொடுகின்ற எல்லா
புல்லாங்குழல்களும்
முகாரியை மட்டும் இசைக்கிறது...

மிஸ்பாஹுல்ஹக்

Friday, 29 April 2016

பிரமாண்டங்களின் பிம்பங்கள்

இடைவெளிகள்
நீளும் போது...
இந்த பிரமாண்டங்களின்
பிம்பங்கள் சுருங்கிக் கொள்கிறது...

இம்சைதரும் வேதனை
நிரம்பிவிடுகிறது
இந்த இடைவெளிகளில்..

விலகிப் பார்க்கும்
ஒவ்வொரு தவனையும்
உறுதிப்படுத்திக் கொளகிறேன்
இங்கே பிரமாண்டங்கள் என எதுவும்
இல்லை..


Saturday, 23 April 2016

உன் நினைவுகள்.

ஒரு கனத்த 
பெருமூச்சோடு
இறங்கிக் கொள்கிறது
உன் நினைவுகள்......

எனக்குள்ளே
பரவிக்கிடக்கும் உன்
புன்னகையின் எச்சங்களில்
கழிகிறது என் கனவுகள்....

உன் வார்த்தைகள்
தந்த ஸ்பரிசங்களில்
பூத்திருந்தது
இப்போது சருகாகிக் கிடக்கும்
இந்த இதயத்தின்
தோட்டம்...

தோழி...
எப்போதும்
ஒரு கனத்த
பெருமூச்சோடு
இறங்கிக் கொள்கிறது
உன் நினைவுகள்......

மிஸ்பாஹுல்ஹக்.



Friday, 1 April 2016

என் ரோஜா

எனக்கும் ஒரு ஷம்சைப்போல்
என் உயிராய் என் எல்லாமுமாய்
ஆன நண்பரே...
என்னை விட்டு நீங்கிப் போனதேனோ.....

இங்கே வெறும் ஜடமாய்
கிடந்தது அழுது தவிக்கிறேன்....
என் கலங்களின் ஒவ்வொரு அணுவிலும்
அழுது வடிக்கிறேன்...

இந்த போக்கிரியை,
போக்கற்று கிடந்தவனை,
அள்ளி அனைத்து ஆக்கிவைத்த
அந்த கரங்கள்,
இனி பற்ற முடியா ஒரு தொலைவில்...
இனி எந்த விரல்கள்
இவன் கண்ணீரை துடைக்கும்.....

ஒரு ஒற்றை இடைவெளி
இந்த  வாழ்க்கையை  பாழாக்கி விடுகிறது
என் எல்லா சுவாரஸ்யங்களும்
என் வெறுமைக்குள் இருண்டு போகிறது...

இந்த அண்டம் வெடிக்க
கத்தி கதற முனைகிறது என் ஆன்மா...
இந்த நெஞ்சு நெருக்கும் வலியை
வெறும் கண்ணீரில் எப்படி மறைப்பது...
ஒரு கல்லில் இந்த சிலையை
செதுக்கிய கரங்கள்...
அதன் கரங்களை பற்றிகொண்டு
போயிருந்திருக்கலாம்...
தனிமையில் என்ன செய்யும்
வெறும் பலமிழந்த சிலை....

எனக்கும் ஒரு ஷம்சைப்போல்
என் உயிராய் என் எல்லாமுமாய்
ஆன நண்பரே...
என்னை விட்டு நீங்கிப் போனதேனோ.....
என் ஓவியங்களின்
இன்றோடு வண்ணமிழந்து போகிறது....
என் எழுத்துக்களை
கண்ணீரும் வலியும்
இந்த தனிமை நிறைந்த  ஏகாந்தத்திற்கு எடுத்து வருகிறது...

இனி எப்போது பார்ப்பேன்

என் ரோஜாவை...



Saturday, 26 March 2016

ஒற்றைச் சுடர்




பெரும் மௌனம் படர்ந்த அந்த
கங்குலில்,
ஒற்றைச் சுடர் ஆடிக் களித்துக்கொடிருந்தது
ஒரு குப்பி விளக்கின் உச்சியில்

மாதமொரு பௌர்ணமியில்
ஓட்டைக் கூரையில் கசியும்
நிலவின் ஒளியைத்தவிர
எந்த பரவசமும் இல்லை
அந்த குடிலுக்கு...

ஒற்றை சுடர் எங்கிருந்து வந்தது...
ஒரு பிரபஞ்சம் அடைந்துக்கிடக்கும்
இந்த குடிலின் வாயிலில்
அமர்ந்திருக்கிறது சுவர்க்கம்....

மெதுவாய் இந்த குடிலில் பரவும்
இந்த தங்க ஒளியில்
உன் புன்னகையும்
உன் கண்ணீரும்
உன் மௌனமும்
உன் கனவுகளும்
மெதுவாய் மங்கியே போகிறது....

குப்பிவிளக்கின் உச்சியில்
நெகிழ்ந்தாடும் சுடரின் மேலே
பிடித்திருந்த வெள்ளை காகிதத்தில்
படியவைத்த கரும் புகையில்
வளர்ந்தது கருமையின் மீது ஒரு காதலும்
ஒரு கவிஞனின் கனவும்...

மிஸ்பாஹுல்ஹக்.

Thursday, 24 March 2016

பெரும் பிம்பங்கள்


ஒவ்வொரு வார்த்தைக்கும்
பெரும் பிம்பங்கள் சமைத்து
பயங்களை பதித்து வைத்திருக்கின்றீர்கள்...
சில போது அவை
ஒவ்வொன்றாய் குதித்து...
பிம்பங்களை இழுத்து வருகின்றது இங்கே...

கருப்பு வெள்ளை கற்பனைகளுக்குள்
வசிக்கும் சில பூனைகள்
பூக்கும் சில வார்த்தைகளை
அவ்வப்போது மென்று தின்று
கராவித்திரிகிறது கற்பனைகளின்
மௌனங்களை குலைத்தபடி...

ஆடைகள் கலைந்தது,
வெறும் சதையாய் காட்டிய வார்த்தைகள் தான்
பின்பு உணர்வுகள் தூவி, இச்சைகள் மூட்டி
என் விரல்களை இழுத்துவந்து
கிளர்ச்சி மூட்டி வருட வைத்தது....

எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து
பாய்ந்து வந்து
வெடித்து சிதறியது சில வார்த்தைகள்...
ஒரு குண்டை விட துளைத்திருந்தது
சில உணர்வுகளை..

வன்மம் மிக்க வார்த்தைகளை
அள்ளி தூவி வைத்திருக்கிறீர்கள்....
முள்ளென உறுத்தி
உறக்கங்களை கலைத்துக்கொண்டு
அகோரப்புன்னகையை
எரிகிறது என் முகத்தில்...

மிஸ்பாஹுல்ஹக்