Saturday, 26 March 2016

ஒற்றைச் சுடர்




பெரும் மௌனம் படர்ந்த அந்த
கங்குலில்,
ஒற்றைச் சுடர் ஆடிக் களித்துக்கொடிருந்தது
ஒரு குப்பி விளக்கின் உச்சியில்

மாதமொரு பௌர்ணமியில்
ஓட்டைக் கூரையில் கசியும்
நிலவின் ஒளியைத்தவிர
எந்த பரவசமும் இல்லை
அந்த குடிலுக்கு...

ஒற்றை சுடர் எங்கிருந்து வந்தது...
ஒரு பிரபஞ்சம் அடைந்துக்கிடக்கும்
இந்த குடிலின் வாயிலில்
அமர்ந்திருக்கிறது சுவர்க்கம்....

மெதுவாய் இந்த குடிலில் பரவும்
இந்த தங்க ஒளியில்
உன் புன்னகையும்
உன் கண்ணீரும்
உன் மௌனமும்
உன் கனவுகளும்
மெதுவாய் மங்கியே போகிறது....

குப்பிவிளக்கின் உச்சியில்
நெகிழ்ந்தாடும் சுடரின் மேலே
பிடித்திருந்த வெள்ளை காகிதத்தில்
படியவைத்த கரும் புகையில்
வளர்ந்தது கருமையின் மீது ஒரு காதலும்
ஒரு கவிஞனின் கனவும்...

மிஸ்பாஹுல்ஹக்.

Thursday, 24 March 2016

பெரும் பிம்பங்கள்


ஒவ்வொரு வார்த்தைக்கும்
பெரும் பிம்பங்கள் சமைத்து
பயங்களை பதித்து வைத்திருக்கின்றீர்கள்...
சில போது அவை
ஒவ்வொன்றாய் குதித்து...
பிம்பங்களை இழுத்து வருகின்றது இங்கே...

கருப்பு வெள்ளை கற்பனைகளுக்குள்
வசிக்கும் சில பூனைகள்
பூக்கும் சில வார்த்தைகளை
அவ்வப்போது மென்று தின்று
கராவித்திரிகிறது கற்பனைகளின்
மௌனங்களை குலைத்தபடி...

ஆடைகள் கலைந்தது,
வெறும் சதையாய் காட்டிய வார்த்தைகள் தான்
பின்பு உணர்வுகள் தூவி, இச்சைகள் மூட்டி
என் விரல்களை இழுத்துவந்து
கிளர்ச்சி மூட்டி வருட வைத்தது....

எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து
பாய்ந்து வந்து
வெடித்து சிதறியது சில வார்த்தைகள்...
ஒரு குண்டை விட துளைத்திருந்தது
சில உணர்வுகளை..

வன்மம் மிக்க வார்த்தைகளை
அள்ளி தூவி வைத்திருக்கிறீர்கள்....
முள்ளென உறுத்தி
உறக்கங்களை கலைத்துக்கொண்டு
அகோரப்புன்னகையை
எரிகிறது என் முகத்தில்...

மிஸ்பாஹுல்ஹக்



Monday, 14 March 2016

நாற்றம் பரவிய சமர்களத்தில்

எப்போதும் 
சமரசங்கள் இல்லாத
சமர் இருக்கும்
களமிது....

வெண்ணிற புரவியில் களிப்புறும்
இந்த கருமை வீரனின்
தோல்வி
இங்கே நிச்சயிக்கப்பட்டது.

எதிரியின் வெற்றியும்
வீரனின் குதுகலிப்பும்
ஒற்றைச் சொல்லின் இரட்டை அர்த்தங்கள்,
ஒரு மாய சுயத்தின் பிம்பங்கள்...

பிணங்கள் பரந்து குவிந்து
நாற்றம் பரவிய இந்த
சமர்களத்தில்
இந்த கோழை
ஒரு மதுக்கின்னத்தை தேடியலைகிறான்....

மிஸ்பாஹுல்ஹக்



Wednesday, 2 March 2016

என் மதுக்கிண்ணம்



என் மதுக்கிண்ணம்
இன்னும் வெறுமையாய் காத்திருக்கிறது…
உன் காதலோடு
நீ மதுவை நிரப்பும் வரை...

என் கனவுகளை
உன் முத்தங்களால்
அலங்கரித்துக் கொள்கிறேன்...
உனக்கும் எனக்குமான
அந்த இரவுகளில்
பொதிந்திருந்தது நம் சல்லாபத்தின்
ரகஸ்யங்கள்....

உன் மதுவுக்கு முன்னே
ஆடிக்கொண்டே இருக்கிறது
இந்த கருப்பு ஆன்மா....
விரைந்திங்கே நிரப்பு என் கிண்ணத்தை...

மிஸ்பாஹுல்ஹக்