Sunday, 26 February 2017

குலிஸ்தானின் ரோஜா

சின்னஞ்சிறு புல்புலை போல
குலிஸ்தானுக்குள் நுழைந்துக் கொண்டேன்.
வாசலில் ஒரு ரோஜா
புன்னகைத்து சொன்னது
‘’இது சா’அதியின் தோட்டம்
உன் ஆயுளால் நீ பறக்க வேண்டியிருக்கும்’’
“ஒரு காதலின் சுடரில் என்னை
எரித்து விட்டே வந்திருக்கிறேன்,
ஒரு கிண்ணமாயே மாறி
உன்மத்தம் தரும் மதுவை
நிரப்பிக் கொள்ளவே வந்திருக்கிறேன்
ரோஜாவே”
பரவசம் தரும் இந்த வெளியெங்கும்
மெல்ல பறந்து பல்கீஸ் எனும் ரோஜாவை
தேடிக்கொண்டிருகிறது இந்த புல்புல்...
வெண்ணிறமாய் பூத்துக்குலுங்கும்
இந்த குலிஸ்தானில்
தனியே ஒரு கருப்பு ரோஜா
விடியலில் வழியும் பனித்துளிக்காக
பூத்துக் கிடந்தது...
பனித்துளியாய் மாறி
ரம்மியம் வழியும் அந்த கருப்பு ரோஜாவின்
இதழில் புல்புல் படர்ந்த போது
நிஷ்டை கலைந்த பல்கீஸ் எனும் ரோஜா
என் பெயரை விசும்பிக்கொண்டு மீண்டும்
மலர்ந்தது...
சா’அதி குலிஸ்தானில் விழிக்கும் முன்பே
நான் அங்கே மயங்கிக் கிடந்தேன்....
எப்படி அந்த ரோஜாவை திருடிக்கொண்டு
வெளியே வருவது....

No comments:

Post a Comment