Sunday, 31 January 2016

கால்கள் இவன் சிறகுகள்.




அறியா வயது என 
அடக்கி வைத்த நாட்களில்
இவனுக்குள் பெரும் கனவுகள் இருந்தன..

சில பட்டாம் பூச்சிகள் 
பின்னே ஓடும் இவன் கால்கள்,
பறக்கும் பரவசத்தில் சிறகாய் தோன்றும்....
இவன் வளர்த்த சில மீன் குஞ்சுகளோடு
கதை பேசி கனவுகள் வளர்க்கும் 
பல நாட்கள் இருந்தது....

இவனுக்கு என சில செடிகள் இருந்தன....
இவனுக்கு என சில மரங்கள் இருந்தன...
இவனுக்கு என சில பட்டாம் பூச்சிகள் இருந்தன...
இவன் உளறல்களையும கனவுகளையும் 
அவை மட்டும் அறிந்திருந்தன...
இவன் கதைகளை அவைகள் மட்டுமே கேட்டு இருந்தன...

இவனுக்கான அந்த உலகத்தில்
சந்தோஷமாய் குதுகலித்து வாழ்ந்த இளவரசன் இவன்...

ஓட்டை கூரை மறைத்த, 
பூச்சு முடிக்கா சுவரொன்றில் கால்கள் பதித்து,
தரையில் உறங்கி 
இவன் முணுமுணுத்த வார்த்தைகள் 
பின்னொருநாளில் கவிதைகளாய் மாறி பறந்தன...

குப்பி விளக்கின் மங்கள் ஒளியில்
மின்னும் இவன் கண்கள்....
ஒரு கனவின் வலிமையை 
பின்பொருநாள் சொல்லும்.....

சேறு படிந்த இவன் வெற்றுக் கால்களை
கழுவும் தோறும் 
சந்தோஷங்கள் வழிந்தோடிக்கொண்டிருந்தன...

மிஸ்பாஹுல்ஹக்.



31 January 2016

Wednesday, 27 January 2016

என் தொடக்கம்: மரணம்.



நீ எதிர்பாராத நிமிடமொன்றில்
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்...

அதிர்ச்சியின் உச்சத்தில் நீ உறைந்துபோகும் 
அந்த கணம், 
திடுதிப்பென்று வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே நிகழ்ந்துவந்த
முகாரி இது...
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…

என் காட்சிப் பிழைகளை 
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில் 
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்கிறேன்....

நிம்மதியாய் நான் உறங்கிப் போன பின்பு
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்....
உன் கண்ணீரில் என் மௌனப்புன்னகையை 
நீ காண்பதை நான் விரும்பவில்லை....

என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்....
உன் ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்....
உன் அழகான அந்த இதழ்களில் அது தொற்றிக்கொள்ளும்....
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு....

மிஸ்பாஹுல்ஹக்.


27 January 2016

Sunday, 24 January 2016

எனக்கான என் வானம்...

நிலா புன்னகைக்கும் ராத்திரியில்
சர்க்கரை மணல் பரந்த அந்த கடற்கரையில்
மல்லாக்க படுத்து.... 
தெளிந்த வானத்தில் சுயம் மறந்து....
செவியிரண்டில் அழுத்திய “ஹெட்செட்டில்”
ரஹ்மானின் இசையில் என்னை அழித்து
நட்சத்திரங்களில் பயணிப்பது தனி சுகம் எனக்கு....

ஒவ்வொரு காலையிலும்
பறக்க பறக்க ஓடி, முண்டியடித்து,
தொற்றிக் கொள்ளும் ரயில் கதவுகளில் பயணித்தபடி...
இதாமாய் இருக்கமாய தழுவும்
காற்றின் ஆசுவாசம் வாங்கி,
தெளிந்த அந்த நீலவானத்தையும்,
ஆங்காங்கே தங்கமீன்களாய் நீந்தி விளையாடும்
காலை மேகங்களையும் ரசிப்பது
உற்சாகம் தரும் எனக்கு....
பெரும் கனவுகள் வளர்க்கும் எனக்குள்....

வானத்தை ரசித்தலை தவிர,
அது தரும் கனவுகளை தவிர
எந்த பேதையின் அழகும்
போதை தந்ததில்லை எனக்கு.....

ஒவ்வொரு சோர்விலும்....
ஒரு தனிமையிலும்...
ஒவ்வொரு தோல்விகளிலும்...
ஒவ்வொரு விரக்தியிலும்...
என்னை தெளிய வைத்திருக்கிறது...
ஒரு கடற்கரையும்
விரிந்து பரந்த ஒரு வானமும்....

மேகங்களுக்குள்ளால் நான் பறக்கும் ஒவ்வொரு முறையும்
அதற்குள்ளே இருந்து விட தவிக்கும் மனது...
இந்த வானம் தரும் பரவசம்,
என்னை மறந்து ஒரு புன்னகையை உதிர்த்து விடும்...


மிஸ்பாஹுல் ஹக்

24th January 2016

Saturday, 23 January 2016

என் காற்றும் கதையும்....

மெதுவாய் என் காதோரம்
எனக்கான அந்த காற்று சொன்ன
கதைகளை எனக்குள்ளே பதுக்கிக் கொள்கிறேன்...

ஒரு ஏகாந்தத்தின் தொலைவில்
இருந்து நான் கொண்டுவந்த
புன்னகையை கொடுத்துவிடுகிறேன்
கதை சொல்லிப் போன என் காற்றுக்கு...

என் நிழல்
என் எதிர்திசையில் விழுந்திருந்தது....
எல்லாம் அந்நியமான ஒரு பிரங்ஞையில்
மௌனத்துள் மூழ்கிப்போகிறேன்....

மிஸ்பாஹுல்ஹக்


23rd January 2016

Monday, 18 January 2016

ஒற்றை நாணயம்

மீற்க முடியா இடுக்கொன்றில்
இந்த சிறுவன் தொலைத்த
நாணயம் நீ....

இவனின் சிறிய உலகில்
சேர்த்துவைத்த பெரும் கனவுகள்
வாழ்ந்தது அந்த
ஒற்றை நாணயத்தில்...

என்றோ ஒரு நாள்
எவனோ ஒருவன் பெறக்கூடும்
அந்த ஒற்றை நாணயத்தை...
அவனுக்கு தெரிய போவதில்லை
ஒரு கனவு சிதைந்ததின் வலி....

ரகசியமாய் அவன் வடித்த
கண்ணீரோடு காய்ந்திருந்தது
அந்த நாணயத்தின் கனவு....

#மிஸ்பாஹுல்ஹக்

18th January 2016



Saturday, 16 January 2016

ஒரு கற்றை இச்சை...

காலத்தின் இடைவெளி விழுந்த
ஒரு பெருவெளியில்
உருகி கரைகிறது
ஒரு கற்றை இச்சை...

அண்டம் முழுதும்
பரவிய ஒரு நரம்பின் வழியே
பரவி படரக்கூடும்
கரைந்துருகிய அந்த இச்சை...

எந்த மூச்சும்
படர்ந்திராத ஒரு யுகத்தின்
ஆழத்தின் கருமையை
ஒரு குருடனின் கைத்தடி
அறிந்திருக்கும்....

இந்த நதியில் மிதக்கும்
சில சருகுகள்,
மெதுவாய் பயணிக்கும்
இந்த நதியின் ஆழத்தை
எப்படி புரியும்....

மிஸ்பாஹுல் ஹக்

16th January 2016



Friday, 1 January 2016

‪தகம்.

கடும் கருமை கவ்விய
கங்குலின் விளிம்பில்
குவிந்திருந்தது ஒற்றைக் கவனம்....
திணைகள் அற்ற உன்
ஒற்றை முகம்,
பிரபஞ்சமாய் பிம்பம் எடுத்து
ஒரு அருவியாய் எனக்குள் புகுந்து
மெய்யுள் அடங்கிப் போனது....