Tuesday, 29 November 2016

சொட்டுச் சொட்டாய்
தீர்ந்த இரவு,
காதலால் நிரப்பிய கனவை
மிச்சம் வைத்திருக்கிறது...!!

Monday, 28 November 2016

மாய வதை


என் கண்களும் நரம்புகளும் புடைக்க,
என் கால்கள் துடிக்க,
உன் கைகளாலோ, இல்லை ஒரு கையிற்றாலோ
கழுத்தை நெரித்து இறுக்கி,
நீ என்னை கொன்றிருக்கலாம்.


என் குரல்வளையை அறுத்தோ,
என் மார்பிலும், வயிற்றிலும்,
இன்னும் கிடைக்கின்ற எல்லா உறுப்புகளிலும்
உன் வார்த்தைகளை விடக் கூர்மையான ஒன்றால்
சாகும் வரை குத்தி குதறியிருக்கலாம்.

என் நரம்புகளும், கலங்களும்
இறுக்கிப்பிடித்து,
உடல் முழுதுமாய் துடித்து,
வாயில் நுரைத்தள்ளி சாக
எனக்குள் நீ நஞ்சூட்டியிருக்காலம்.....

என் பின்னந்தலையும் மூளையும் சிதற,
என் நெற்றிப் பொட்டில்
நீ அழுத்தும் துப்பாக்கி ரவையால்,
விசுக்கென பரவும் ஒரு நொடி வலியில்,
என் அமைதியை நீ பார்த்திருக்கலாம்...



என் மனதைவிட கனமானவொன்றால்
என் மூட்டுக்களும், எலும்புகளும்
மண்டையோடும்,
உடைந்து, சிதைந்து நான் மாண்டு போகும் வரை,
மெல்லிய ஸ்பரிசங்கள் படர்ந்த
உன் கைகளால் கொன்றிருக்கலாம்...

என் கைகளை பின்னே இறுகக்கட்டி,
என் ஓலம் கேட்காதபடி என் வாய்க்குள்
உன் மௌனங்களை திணித்து,
என் உடல் துண்டாகி சிதறும்வன்னம்
தண்டவாளமொன்றில்  கிடத்தி வைத்திருக்கலாம்....

இல்லை,
பொசுக்கென பற்றிக்கொள்ளும்
என் கோபத்தைப்போல ஏதோவொன்றை
என்மீது உற்றி,  என்னை எரித்துவிட்டிருக்காலாம்.


என் கொடுரமான மௌனங்கள் செய்யும்
மாய வதைக்காக
நீ என்னை எப்படியோ கொன்று,
பழிதீர்த்துக் கொள்...
என் வார்த்தைகளை மீள முடியாத
ஏகாந்தமொன்றில் புதைத்துக்கொண்டிருக்கிறேன்.


#மிஸ்பாஹுல்ஹக்










Friday, 18 November 2016

கவிதைகள் விற்பவன்.



கவலைகள் சுமந்து., கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
கடன்களை சுமந்து, கடமைகளை சுமந்து....
வலிகளை சுமந்து, பலிகளை சுமந்து
காதலை சுமந்து,  தீராத ஆசைகள் சுமந்து....
நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....

வேகமாய் அவனை கடந்து போகிற
விந்தையான ஒவ்வொரு முகமும்
புத்தகங்களின் பக்கங்களைப்  போல....
மெதுவாய் அவன் புரட்டிக்கொண்டிருக்கிறான்
கருப்பு வெள்ளை எழுத்துக்கள்
இன்னொரு உலகத்தை திறந்து விடுவதைப்போல
ஒவ்வொரு முகமும் அவன் கவிதைகளை செய்துகொண்டிருந்தது....


யாரோ மிச்சம் வைத்து போடுகின்ற உணவு
அவன் வயிற்றை நிரப்பி விடுகிறது....
அவமானங்களை அணிந்துக்கொண்டவனை
நிர்வாணம் அலங்கரிகிறது....
பேரிரைச்சல் தரும் இந்த சாலைகள்
அதில் கனவுகள் அமர்ந்து செல்லும் வாகனங்கள்....
மனித விலங்குகளின் ஆரவாரங்கள்
அவன் தவத்தை கலைத்திருக்கவில்லை....
இந்த சாலையோரம் அவனுக்கு உறக்கம் கொடுத்தது....
தேவைகள் அற்றவனிடம் நிம்மதி இருக்கும் என்பது
அவனை போன்றவர்கள் அறிந்து வைத்திருந்த ஞானம்,

தனிமைப்படுத்திக் கொள்ள
காடோ, கற்குகையோ, மலைகளோ
தேவையில்லை.....
சாலையோரங்களில் அவனைப் போன்றவர்களை
இந்த மனிதர்களே தனிமைப்படுத்தி விடுகிறார்கள்...


அழுக்கு படிந்து நாற்றம் வீசும் குமட்டும்  அவன் மேனி
இந்த வாழ்க்கையின் குறியீடு.
அடிப்படையில் மனிதன் அசுத்தமானவன் என்பதையும்
அழுகிபோகும் பலவீனம் என்பதையும்
அவனைக் கடக்கும் அந்த முகங்களுக்கு
அவன் உணர்த்திக்கொண்டே இருக்கிறான்....


அவன் இடுப்பைச் சுற்றி, சொருகி கிடக்கும்
பைகளில், மெத்த கனவுகள் கிடந்தன....
அது எப்போது யாரால் கண்டவைகள் என
அவனுக்கு தெரியாது....
அந்த கனவுகளின் விசும்பல்கள் மட்டும்
அவனுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது....

கவலைகள் சுமந்து, கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
காதலை சுமந்து, நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....
அவனோ அந்த முகங்களில் இருந்து வழியும்
கவிதைகள் சேகரிக்கிறான்....

அதோ அந்த பைத்தியம்,
அவன் நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறான்
அந்த சாலையோரம்....

#மிஸ்பாஹுல்ஹக்.











Sunday, 6 November 2016

எதிலிருந்து நான் விழித்தேன்...

திடுகிட்டு விழித்துப்பார்த்த போது,
அவள் வார்த்தைகள்
சிதறிக் கிடந்த ஒரு வெளியில்
என் கனவுகள் தனித்து நின்றன....

எதிலிருந்து நான் விழித்தேன்...
நான் உறங்கியாதாய் எனக்கு ஞாபகம் இல்லை...
நான் விழித்துக் கிடந்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை...
எதிலிருந்து நான் விழித்தேன்...

சிதறிக் கிடக்கிற
அவள் வார்த்தைகள் பொறுக்கி,
என் எழுத்துக்களில் பொருத்திக் கொள்கிறேன்...
செத்துக் கிடந்த என் எழுத்துக்கள்
இப்போது மெல்ல உயிர்பெற்று எழுகிறது....

ஒரு அண்டம் போல கனத்துக் கிடக்கிறது
அவளின் வார்த்தைகள்...
பெரும் காதல் கொண்ட இதயம்
ஒரு பேரின்பமாய் அதை தாங்கிக் கொள்ள கூடும்...
இங்கே எல்லாவற்றின் இரகசியமும்
தீராத ஒரு காதல் தானே...

உண்மையில் எதிலிருந்து நான் விழித்தேன்...
இந்த மாயக் கேள்வி
என் கனவுகளை இரவில் இருந்து இழுத்து
தனிமைகளால் சித்ரவதை செய்கிறது...

வெண்மை மட்டுமே படர்ந்த
ஒரு தனித்த உலகில்....
அவள் வார்த்தைகள் கொண்டு
உன்னதமான என் காதலை செதுக்கிக் கொண்டிருக்கிறேன்....
அது மெல்லிய ‘ஆபேரி’யாக ஒலித்துகொண்டே இருக்கிறது...