யஷோதரா

01:

வீணை நரம்புகளில், மத்தியமாவதியை மீட்டுதல் போல உன் பொன்விரல்களால் என் தலைக்கோதிக்கொண்டிருகிறாய் யஷோதரா....
ஒரு நிஷ்டையைப் போல கண்கள் மூடி உன் மடியில் சாய்திருக்கிறேன் நான்....
ஒரு துளி கண்ணீரில் ஆசுவாசம் படர்ந்திருக்கிறது...
ஆர்ப்பரிக்கும் புயல் கொண்ட ஆழியைபோல, என்னை முழ்கடிக்க பயமுறுத்தும் என் அழுத்தம் மிக்க நாட்களை நான் கடந்து விட உன் காதல் வரமாய் இருந்தது தோழி...
யஷோதரா;
உன்னதமான உன் காதலால் செதுக்கப்பட்டவன் யான்,
கனவு விதைகளை என்னுள் தூவி, உன் காந்தம் மிக்க வார்த்தைகளால் ஒரு மாயம் செய்து என் கனவுகளை விருட்சமாய் செழிக்க செய்தாய்...
உன் வசியமிக்க குரல், நொடிதோறும் எனக்குள் மெல்லிய இசைபோலே ஒலித்துக் கொண்டிருக்கிறது...
உன் அழகான அந்த புன்னகை என் கனவுலகில் படர்ந்திருக்கிறது.
பேரின்பம் தரும் உன் காதலை என்னில் இருந்து நீக்கிப்பார்த்தால், நான் அங்கு இருக்க மாட்டேன், ஆக உன் காதலே நான்....
என் இருப்பின் நீட்சி உண்காதலில் இருக்கிறது கண்ணே...
காதல் தீர்கிற ஒரு நாளில் என் மரணம் நிகழ்ந்திருக்கும்.....


..................................................................................................................................................



02:


இங்கே நரமென உலவும் சர்ப்பங்கள் கக்கும் கொடூர விஷங்களின் யதார்தத்தை மெல்ல பருகும் உறுதிமிக்க தேவதையை கடந்திருக்கிறாயா யஷோதரா....

பெண்மை அடையும் முன்பே பெற்ற தகப்பனின் விரக வேட்டையில் சிக்கி தவித்த பூவிதழை, கனவுகள் வளர்க்கும் வயதில் வாரணம் கையில் மாலையாகிய ஒரு ரோஜாவை, ரணங்களின் மேலே புணரப்பட்ட குருதித் துளிகளை, கைகள் இட்டு பிய்த்து எடுத்து ஒரு சிசுவை
பார்வைகளாலும் வார்த்தைகளாலும் வன்புணர்ந்த வக்கிரத்தை, மலம் தின்னும் நாவுகள் செய்த கற்பனை கதைகளில் மானம் இழந்த ஒரு ரதியை நீ கண்டிருக்கிறாயா யஷோதரா.....

அந்த ஒற்றை புன்னகைக்குள் அவள் புதைத்திருக்கும் கண்ணீரின் வலிகள் தெரியுமா இந்த பூமிக்கு...

‘’எத்துனை கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும்,


அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்”
நா.முத்துகுமார் சொன்னதை போல...

எத்துனை வக்கிரங்களை, எத்துனை வன்முறைகளை, எத்துனை அவமானங்களை எத்துனை சோகங்களை ஒரு ஒற்றை புன்னகையின் பின்னே புதைத்து விட்டு பெரும் ரசனையை அவளுக்குள் இருந்து அலைகளை போல எழுப்பிக்கொண்டே இருக்கிறாள்....

ஒரு ரம்மியமான ஏகாந்தமொன்றில் அவள் கைகளை இறுகப்பற்றி அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...
இன்னும் அவள் புன்னகைக்கிறாள்....

#மிஸ்பாஹுல்ஹக்

..................................................................................................................................................


03:

காதல் மிகைத்த பின்னிரவொன்றில் உன் மடியில் சாய்ந்து கண்கள் மூடிக் கிடக்கிறேன். உனக்கு பிடித்த பிரதிகளை நீ எனக்காக வாசித்துக்கொண்டு இருக்கிறாய் என் யஷோதரா...
ஒரு புல்லாங்குழல் இசையை போல, ஷெனாய் தரும் மெல்லிய இதத்தை போல உன் குரல் அந்த எழுத்துக்களை என்னுள் மெதுவாய் இழுத்துச் சென்று ரம்மியமான கற்பனை காட்டின் தாழை திறந்து விடுகிறது...
அபினி தரும் மயக்கத்தை விட உன் மடியும், உன் குரலும், அந்த எழுத்துக்களும் தரும் உச்ச பரவசத்தில் கண்கள் மூடி இன்னொரு உலகில் என் ஆன்மாவும் மனமும் மிதந்து கிடக்கிறது...
குளிர் படர்ந்த பனி பொழியும் இரவுகளில் மெல்ல பருகும் பக்கார்டி மிடரை விட நீ சொல்லும் கதைகளும், ஊடுறுக்கும் உன்பார்வையும் கதகதப்பை பரவச்செய்கிறது யஷோதரா....
உன்னோடு கடக்கும் ஒவ்வொரு இரவும் உன்மத்தமான கனவைப் போலத்தான், காதலின் ஆழத்தில் என்னை மூழ்கடிக்கச் செய்கிறது....
உன் விரல்களால் என் நெற்றியில் ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாய்...

1 comment: