தனிமையிலிருந்து கொண்டுவந்த
இந்த கருப்புவெள்ளை கதையின் மீது
என் வண்ணங்களை தீட்ட முனைகிறேன்...
இந்த கதையில் ஆங்காங்கே
புதைக்கப்பட்டு கிடக்கும்
அந்த
ஒற்றைப் புன்னகையின் சொந்தக்காரனை
இந்த பிரதி எங்கும் தேடி அலைகிறேன்...
வன்மங்களால் வரண்டுக் கிடக்கும்
அந்த நீலக்கண்களில்,
கசியும் ஏக்கங்களும்
பசியின் வாட்டாமும்
என் வர்ணங்களில் வழிந்து ஓடுகிறது....
இந்த பிரதியில் இருந்து அவனை
பிரித்தெடுக்க முனைவதை
கதை சொல்லி தடுத்துக் கொண்டு இருக்க...
கதைக்குள்ளே இருந்த என்னையும் சேர்த்து,
இந்த பிரதியை கிழித்தெறிந்து விடுகிறேன்...
அவன் நானாகவும்
நான் அவனாகவும் வேடம் மாற்றிக் கொண்டிருக்கலாம்,
இந்த கதையின் வாசகானாக அவன் மாறி
என்னை அவன் இந்த கதையில் காணும் போது
என்ன நினைப்பான்....
நான் கிழித்துப்போட்ட பிரதியில்
அந்த நீலக் கண்கள் என்னை வெறித்துப் பார்க்கிறது...
அந்த பார்வையில் என் இரவுகளையும்
அவன் கனவுகளையும் நாம் தொலைத்திருக்கிறோம்...
ஒற்றை பிரதி அழிந்த பின்பும்
ஒவ்வரு வாசகனின் பிரதியிலும்
அந்த வேதனை வாழ்கிறது...
உன்னை எப்போதாவது
நான் அனைத்துக் கொள்வேன்,
அப்போது இந்த பிரதியை கிழித்துவிட்டதற்காய்
என்னில் காரிஉமிழ்ந்திடு...
#மிஸ்பாஹுல்ஹக்.

No comments:
Post a Comment