Wednesday, 27 January 2016

என் தொடக்கம்: மரணம்.



நீ எதிர்பாராத நிமிடமொன்றில்
நான் மாண்ட செய்தி உன்னை வந்தடையக்கூடும்...

அதிர்ச்சியின் உச்சத்தில் நீ உறைந்துபோகும் 
அந்த கணம், 
திடுதிப்பென்று வந்த போதும்..
ஒவ்வொரு நாழிகையும் நான் உணர,
மெதுவாய் எனக்குள்ளே நிகழ்ந்துவந்த
முகாரி இது...
அதன் ஆரோகணத்தின் முடிவிலியிது…

என் காட்சிப் பிழைகளை 
சரி செய்துகொள்ள அவகாசம் இல்லா கணமொன்றில்,
இந்த தொடக்கத்தில் 
என்னை முடித்துக்கொள்கிறேன்.
காலத்தின் சூட்சுமம் இல்லா
பெரு வெளியொன்றில் பறக்கிறேன்....

நிம்மதியாய் நான் உறங்கிப் போன பின்பு
என் முகத்தை திறந்து பார்க்கவோ,
திறந்து காட்டவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்....
உன் கண்ணீரில் என் மௌனப்புன்னகையை 
நீ காண்பதை நான் விரும்பவில்லை....

என் வெறிச்சோடிய புன்னகைகளை
இங்கே பரவவிட்டிருக்கிறேன்....
உன் ஒவ்வொரு புன்னகையிலும்
அது பரவசம் அடையும்....
உன் அழகான அந்த இதழ்களில் அது தொற்றிக்கொள்ளும்....
மீண்டும் மீள இயலாதா இந்த இல்லாமையை விட்டு
நான் மீண்டு போன பின்பு....

மிஸ்பாஹுல்ஹக்.


27 January 2016

No comments:

Post a Comment