Wednesday, 3 February 2016

தோழி



என் அழகான சண்டைக்காரி நீ...
உன் ஆழமான அன்பில் 
குழந்தையாகிப் போகிறது என் உணர்வுகள்.....

நம் பார்வைகளால்
பகிர்ந்தது கொள்ளும் ஒரு புன்னகை
ஆயிரம் வார்த்தைகளை சேமித்து விடுகிறது...
முழு இரவில் “ஷெனாய்” தரும்
மயக்கத்தின் சுவையை
நொடியில் கடக்க விடுகிறது அது...

என் அழகான சண்டைக்காரி நீ...
உன்னிடம் மட்டும் தோற்று விடுகிறது
என் செருக்கு...

உன் நாட்களை நீ விவரித்துக் கொண்டிருக்கிறாய்
உன் உணர்வுகளில் நான் பயணிக்கிறேன்...
என் வலிகளில் நீ அழுகிறாய்...
உன் தனிமையில் நான்
உன் மௌனமாய் இருக்கிறேன்...

தனியான நமக்கான கனவுகளை
இருவரும் சேர்ந்தே வளர்க்கிறோம்...
தனியான நமக்கான பாதைகளில்
இருவரும் கைகள் கோர்க்கிறோம்...
இறுகப் பற்றிய நம் விரல்கள் இடைவெளிகளை
விரும்பாமல் பயணிக்கும்...
நமக்கான காயங்களை நமக்குள்ளே
பகிர்கிறோம்...

என் அழகான சண்டைக்காரி நீ...
உன்னிடம் மட்டும் அடிக்கடி தோற்கிறேன்...

நாம் நமக்காய் உருவாக்கிக் கொண்ட
நமக்கான உலகத்தில் சந்திக்கிறோம்...
நம் வார்த்தைகளை நட்டு
வளர்த்து விட்ட ஒரு செடி,
உணர்வுகளை பூவென செய்துக் கொண்டிருக்கிறது...

பின் ஒரு நாளில், உனக்கான உலகித்தில்
இந்த செடியை நீ நினைத்திருப்பாய்...
அப்போதும், உணர்வுகளின் சருகுகளோடு
என் தனிமையில் நான் இருப்பேன்...
எல்லா பரபரப்பிலும்,
அமைதியாய் எனக்குள்ளே நீ எப்போதும்
புன்னகைத்தபடி பார்த்திருப்பாய்..

என் அழகான சண்டைக்காரி நீ...

மிஸ்பாஹுல்ஹக்



No comments:

Post a Comment